சிதைத்தல். 12. அடியிடுதல். 13. போதல். 14. கூத்தாடுதல். 15. மீளுதல். “சூழ்ந்த நிரைபெயர” (பு. வெ. 1 10). 16. பணப்புழக்கமாதல். அந்தவூரில் எந்த நாளும் பணம் பெயரும் (உ. வ.). 17. பணத் தண்டலாதல். ஆயிரம் உருபா பெயர்ந்தது (உ. வ.). பெயர்த்தல் = பெயரச் செய்தல். பெயர் - பேர். பேர்தல் = பெயர்தல். பேர்த்தல் = பெயர்த்தல். பொள் - பள் - பள்ளம் = 1. குழி. “பள்ள மீனிரை தேர்ந்துழலும்” (தேவா. 93 5). 2. கன்னத்தில் விழும் குழிவு. 3. ஆழம். “பள்ள வேலை பருகுபு” (இரகு. ஆற்று. 1). 4. தாழ்வு. “பள்ளம தரிய படர்சடை மேற்.... கங்கை” (தேவா. 427 1). 5. தாழ்நிலம். பள்ளம் - பள்ளன் - பள்ளமான மருதநிலத்தில் வாழும் உழவர் வகுப்பான். பள்ளன் - பள் = 1. பள்ளர் வகுப்பு. 2. ஒருசார் பள்ளர் வாழ்க்கை பற்றிய ஒருவகை நாடகப் பனுவல் (அரு. நி.). 3. காளிக்குக் காவு கொடுக்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை. பள்ளன் - மள்ளன் = மருதநிலத்தில் வாழும் உழவன். “மள்ள ருழுபக டுரப்புவார்” (கம்பரா. நாட. 18). பள்ளன் - பள்ளி = 1. பள்ளர்குலப் பெண். 2. பள்ளன் மனைவி. 3. வன்னியர் குலம். 4. வன்னியர் குலச் சிற்றரசன். “ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலே” (திவ். இயற். திருவிருத். 40, வியா. 235). பள்ளன் - பள்ளத்தி = பள்ளர்குலப் பெண். பள்ளத்தி - பள்ளச்சி = பள்ளர்குலப் பெண். பள்ளி - பள்ளிச்சி = வன்னியர்குலப் பெண். பள் - பள்ளு = பள்ளர் வாழ்க்கைபற்றிய நாடகப் பனுவல். பள் - பள்ளி = 1. படுக்கை. பள்ளிகொண்டான், பள்ளியெழுச்சி முரசம். 2. தூக்கம். “பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப” (கலித். 121). 3. விலங்கு துயிலிடம் (பிங்.). 4. படுக்கையறை. குறிப்பு: துளைத்தல் என்பது, குழித்தல், குடைதல், தோண்டுதல், துளையிடுதல், துருவுதல் என்றும்; குத்துதல், வெட்டுதல், கிள்ளுதல், கீறுதல், சீவுதல், சிதைத்தல், அறுத்தல், கிழித்தல், பிளத்தல், உடைத்தல், பகுத்தல் (பிரித்தல்), துண்டித்தல், (துண்டுபண்ணுதல்), பொடித்தல் என்றும்; குலைத்தல், கலைத்தல் என்றும்; வினைக்கும் கருவிக்கும் ஏற்றவாறு பலதிறப்படும். |