நன்றாம் பணிதல்” (குறள். 125). 3. இறங்குதல் (W.). 4. தாழ்வாதல். 5. குறைதல். 6. எளிமையாதல். 7. வணங்குதல். “உடையான் கழல் பணிந்திலை” (திருவா. 4 35) பணிந்தவன் = குள்ளன் (W.). ம. பணியுக. பணித்தல் = 1. தாழ்த்துதல். “வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப” (பு. வெ. 4 9, கொளு). 2. குறைத்தல் (W.). 3. மிதித்தல், “நந்து மாமையும் பணித்து” (சீவக. 2109). பணிவிடை = தொண்டு, குற்றேவல். திருப்பணி = தெய்வத் தொண்டு. பணி - படி. படிதல் = 1. அடியில் தங்குதல். வண்டல் படிந்திருக்கிறது (உ.வ.). 2. தங்குதல். “பறவை படிவன வீழ” (நெடுநல். 10). 3. வயமாதல். “அடியாத மாடு படியாது” (பழ.). 4. கீழ்ப்படிதல். பெரியோர்க்குப் படிந்து நடத்தல் வேண்டும் (உ.வ.). 5. குளித்தல். “தடங்கடலிற் படிவாம்” (திருவாச. 38 6. அமுங்குதல். எண்ணெய் தேய்த்துச் சீவினால் மயிர் படியும் (உ.வ.). 7. தணிதல், வெள்ளம் படிந்தது (உ.வ.). 8. கீழே விழுந்து வணங்குதல். “சிரந் தலத்துறப் படிந்து” (உபதேசகா. சிவத்து. 344). பணி செய்வோன் = 1. வேலைக்காரன். 2. விழாக்காலத்தில் தாரையும், இழவுநாளில் சங்கும் ஊதுபவன். கீழ்ப்படிதல் = சொன்னபடி செய்து பணிவாய் நடத்தல். பணி - பாணி, பாணித்தல் = 1. காலந் தாழ்த்தல். “பாணிதீ நின்சூள்” (பரிபா. 8 2. காத்திருத்தல். “பாணியே மென்றார்” (கலித். 102). 3. பின்வாங்குதல். “சமரிற் பாணியான்” (கந்தபு. மூவாயிரர். 59). பாணி = பள்ளமான இடத்தில் தங்கும் அல்லது பள்ளம் நோக்கி ஓடும் நீர். “விண்ணியல் பாணியன்” (பதினொ. பொன்வண். 30). க. பணி, மரா. பாணி, இ பாணீ. நீரைக் குறிக்கும் பாணி என்னுஞ்சொல் வடமொழியில் இல்லை. நீரம் என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் நீர என்று கடைக்குறைந்து வழங்கும்போது, பாணி (நீர்) என்னும் சொல் இந்தியில் பாணீ என்று திரிந்து வழங்குவது இயற்கைக்கு மாறன்று. பண் - பண்ணல் = 1. வயலைத் திருத்துதல். 2. பயிர் செய்தல். “பண்ணிய பயிரில் புண்ணியந் தெரியும்” (பழ.). 3. வேலை செய்தல். 4. செவ்வையா யமைத்தல். 5. அழகுபடுத்துதல். 6. அணியமாக்குதல் (ஆயத்தஞ் செய்தல்). 7. இசையெழுவும் எண்வகையுள் ஒன்று. “பண்ணல்...... எண்வகையா லிசையெழீஇ” (சிலப். 7 5-8). |