போழ்வர் கலவர்” (நான்மணி. 18). 3. அழித்தல். “நீடிருள் போழு நிலைமைத்து” (சீவக. 2118). க. போழ். போழ் = 1. பிளவு. “போழ்படக் கிடந்த” (கல்லா. முருகக். 26). 2. துண்டம். “பசுங்காய்ப் போழொடு” (பெரும்பாண். 307). 3. பிளந்தறுத்த தோல்வார். “போழ்தூண் டூசி” (புறம். 82 4). 4. தகடு. “வெள்ளிப்போழ் விலங்கவைத் தனைய” (சீவக. 70). போழ்முகம் = பிளந்தாற் போன்ற முகத்தை அல்லது வாயையுடைய பன்றி (பிங்.). போழ்வாய் = 1. பிளந்த வாய். “போழ்வாய வன்றிலும்”. 2. பொக்கை வாய் (யாழ்ப்.). க. பொடுவாய் (b). “போழ்வாய்ச்சி கட்டுடம்பு பூரித்தாள்” (விறலிவிடு. 195). போழ் - போழம் = பொய், வஞ்சனை, மாறுபடுஞ் சொல். “போழம் பலபேசி” (தேவா. 1080 11). போழப் பெட்டி = 1. அகன்ற வாயுள்ள வண்ணப் பனையோலைக் கூடை. 2. மணமகள் வீட்டிற்கு வரிசை கொண்டுபோகும் சாயவட்டி. பொழு - பொழுது = இருளைத் துணிக்கும் கதிரவன். ஒ.நோ.: “தாழிருள் துமிய மின்னி” (குறுந். 270). பொழுது புறப்பட, பொழுது சாய, பொழுது வணங்கி (சூரிய காந்தி) முதலிய வழக்குகளால், பொழுது என்னும் சொல் முதலாவது கதிரவனைக் குறித்ததென்பது பெறப்படும். பொழுது = 1. கதிரவன். “பொழுதுபோய்ப் பட்ட பின்றை” (சீவக. 1747). 2. காலம். “முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” (தொல். அகத். 4) 3. நாள். “விருந்தும் மருந்தும் மூன்று பொழுது” (பழ.). 4. வாழ்நாள். “பொழுதளந் தறியும் பொய்யா... காண்கையர்” (முல்லைப். 55). 5. சிறுபொழுது. “மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது” (குறள். 1231) 6. பெரும்பொழுது. “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்” (தொல். அகத். 19). 7. |