பெயரன் - பேரன். பெயர்த்தி - பேர்த்தி. பெய் - பேய். பேய்தல் = மழை பெய்தல் (உ.வ.). “பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது” (பழ.). பேய் - பேயு - பேசு. ஒ.நோ.: தேய் - தேயு - தேசு - வ. தேஜஸ், இ.தேஜ். பேசுதல் = மழை பெய்வது போலச் சொற்களைச் சொரிதல். ஒ.நோ.: பொழிதல் = மழை பொழிவது போல விரைந்தும் விடாதும் பேசுதல். பேசு - வ. பாஷ் (bh). - பாஷா (- பாஷை - பாடை, பாசை, பாழை). பொழு - பொகு. பொகுத்தல் = துளைத்தல் (யாழ். அக.). பொகு - பொக்கு = 1. மரப்பொந்து (பிங்.). 2. உள்ளீடு முற்றாத கூலம் (தானியம்). 3. பொய் (உ.வ.). 4. குற்றம். தெ. பொக்கி. தெ. பொக்கு. பொக்கு - பொக்கம் = 1. பொய். “பொக்கம் பலபேசி” (தேவா. 326 7). 2. வஞ்சகம். “பொய்யும் பொக்கமும் போக்கி” (தேவா. 1210 4). 3. குற்றம். “பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே” (தேவா. 1017 1). ம. பொக்கம், தெ. பொக்க (b). பொக்கு - பொக்கல் = பொக்கை. பொக்கு - பொக்கை = 1. துளை (W.). 2. பல்லின்மை. 3. குற்றம். “நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து” (தேவா. 942 10). தெ. பொக்க (b), க. பொக்கெ. பொக்கை வாய் = பற்போன வாய். “பொக்கைவா யாக்கினார் சூரியனை” (தனிப்பா. II, 25 : 56). பொக்கு - பொக்கணம் = 1. சோழியப்பை. “சுத்திய பொக்கணத்து.....கோலத்தினீர்” (திருக்கோ. 242). 2. பெருமருந்து என்னும் மூலிகை (மலை.). ம. பொக்கணம், தெ. பொக்கணமு (b), க. பொக்கண (b). பொக்கு - பொக்கணி = 1. நெற்குத்தும் உரல். 2. விரிந்த தொப்புள். 3. குடிநீர்க் கலவகை (யாழ். அக.). |