“தெவ்வர் தேஎத்து” (புறம். 6) திசை, தேசம் என்னும் சொற்கள் பக்கம் என்னும் பொருளில் வருதலை, ‘அந்தத் திசைக்கே போகமாட்டேன்’ என்னும் தமிழ் வழக்காலும், ‘ஏகதேசம்’ என்னும் வடமொழி வழக்காலும் அறியலாம். ஏகதேசம் = ஒருபக்கம், ஒரு பகுதி. தேசம் என்னும் சொல் முதலாவது எல்லையைக் குறித்து, பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது. ஒ.நோ: சீமை = எல்லை, நாடு. ‘திக்குத் திக்கென்று அடித்துக் கொள்ளுகிறது’ என்னும் வழக்குண்மையாலும், நாத்தட்டுதல் திக்குதல் எனப்படுதலாலும், திகை என்னுஞ் சொல் ககரவொலி கொண்டிருத்தலாலும், திக்கு என்னும் சொல்லும் தென்சொல்லே யென்க. முள் - முளி - விளி - விளிம்பு = ஓரம். விளிம்பு - (விளிம்பு) - வடிம்பு. முட்டு - மட்டு = அளவு. மட்டு - மட்டம் = அளவு, சரியான அளவு, தாழ்ந்த அளவு, தாழ்வு. கடல்மட்டம், மட்டப்பலகை, மட்டக்குதிரை, மட்டத்துணி முதலிய வழக்குகளை நோக்குக. vii. முடிதல் உலத்தல் = முடிதல். உறுதல் = தொடுதல், முட்டுதல். உறு - இறு - ஈறு. இறு - இறுதி. இறுதல் = முடிதல். இறு - இற - இறப்பு = சாவு. இறுத்தல் = கடமையைத் தீர்த்தல், வரி செலுத்துதல். இறு - இறை = கடமை (வரி). இறுத்தல் = வழிச்செலவை விட்டிருத்தல், தங்குதல். இறு - இறை - இறைவன் = எங்குந் தங்கியிருப்பவன். உறு - அறு - அறுதி = முடிவு. அறு - அறவு = நீக்கம். |