பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

துவலுதல் = சாதல்.

துல் - (தில்) - (திர்) - தீர். தீர்தல் = முடிதல், நீங்குதல். தீர்மானம் = முடிவு, முடிபு. தீர் - தீர்வை.

பொல் - பொன்று. பொன்றுதல் = இறத்தல், முடிதல்.

முல் - முற்று. முற்றுதல் = முடிதல், இறத்தல்.

முள் - முளி - விளி. விளிதல் = முடிதல், இறத்தல்.

முளிதல் = முற்றுதல், கெடுதல். விளி - வீ. வீதல் = முடிதல், சாதல். முள் - விள் - விழு - விகு - விகுதி = இறுதி, ஈறு.

முளி - (முழி) - முடி - முடிவு. முடி - மடி. மடிதல் = இறத்தல்.

முடி - முசி. ஒ.நோ. ஒடி - ஒசி. முசிதல் - முடிதல் = இறத்தல்.

“மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்” என்னும் திருமண வாழ்த்து மரபுரையைக் காண்க.

முட்டுதல் = முடிதல்.

முஞ்சுதல் = முடிதல், சாதல். மூசுதல் = முடிதல், சாதல். முச்சுதல் = முடித்தல். மூழ்த்தல் = முதிர்தல். மூழ் - மூய். மூய்த்தல் = முடித்தல்.

viii. மழுங்கல்

ஒன்றோடொன்று முட்டும் பொருள்களுள், மெலியது ஒரே முறையிலும் வலியது பல முறை பின்னும் முனை மழுங்கி மொட்டை யாகின்றன. கூராகச் சீவின் எழுதுகோல் தேய்வது, எழுதப்படும் கருவியில் அது பலமுறை முட்டுவதனாலேயே.

(நுள்) - (நுழு) - நழு - நழுங்கு. நழுங்குதல் = மழுங்குதல். நழுங்கு - நழுக்கு - நழுக்கம் = மழுக்கம், மழுங்கல்.

பொட்டு - பொட்டை = கண்ணொளி மழுக்கம்.

முள் - (மள்) - மழு - மழுகு - மழுங்கு - மழுக்கு - மழுக்கம். மழுக்கு - மழுக்கை. மழுங்கு - மழுங்கல்.

முள் - முட்டு - மொட்டை - மட்டை. மழுமொட்டை - மழுமட்டை.

முள் - (மொள்) - மொழுக்கு - மொழுக்கட்டை - மொக்கட்டை = மழுக்கமானது.

மொழுக்கு - மொக்கு - மொக்கை = கூரின்மை.