சப்பு - சப்பளி. சப்பளிதல் = சப்பையாதல். சப்பளித்தல் = அடியிற் சப்பையாக உட்கார்தல். சப்பளி - சப்பளம் - சப்பணம் = சம்மணம். சப்பணங் கூட்டுதல், சம்மணங் கூட்டுதல் என்பன வழக்கு. சப்பளக்கட்டை = சப்பையான தாளக்கட்டை (சப்பளாக் கட்டை). சப்பு - சப்பத்தி = தட்டையான முத்து. சப்பு - சப்பாத்து = (தட்டையான) செருப்பு. சப்பாத்து - சப்பாத்தி = தட்டையான அல்லது செருப்புப் போன்ற இலையுடைய கள்ளிவகை. வடவர் தட்டையான அப்ப (ரொட்டி) வகையைச் சப்பாத்தி என்பது கவனிக்கத்தக்கது. சப்பு - (சப்பாளி) - சப்பாணி. ஒ.நோ: களவாளி - களவாணி. சப்பாணி = நிலத்திற் சப்பையாயிருக்கும் முடவன், அவனைப் போல் குழந்தை அமர்ந்திருந்து கைதட்டும் நிலை. தட்டை என்பது உயரத்திற்கு மாறான தன்மையாதலால், அதை யுணர்த்தும் சப்பையென்னும் சொல் பொதுவாகத் தாழ்வான நிலையையே குறிக்கும். சப்பை = தட்டையானது, தாழ்ந்தது, பயனற்றது, சுவையற்றது, கெட்டது. சப்பைத்துணி = மட்டமான துணி. சப்பை நிலம் = பயனற்ற நிலம், சப்பை வாக்கு (சப்பட்டை வாக்கு) = பயனற்ற சொல். சுவையற்றதைச் சப்பென்றிருக்கிறது என்பது உலக வழக்காதலால், சப்பு என்பதே சப்பை யென்று திரிந்திருத்தல் உணரப்படும். சொட்டுச் சொட்டென்று சொட்டுகிறது, சொத்தென்று விழுந்தது என்னும் வழக்குண்மையாலும், தட்டுங் கருவி யொன்று சுத்தி எனப்படுதலாலும், சட்டு சப்பு முதலிய சொற்களும் தொடக்கத்தில் உகர முதலாகவே யிருந்திருத்தல் வேண்டும். |