முளரி = முட்செடி, முட்சுள்ளி. முளா - முளவு = முள்ளம்பன்றி. முண்டு - முண்டகம் = முள், நீர்முள்ளி, தாழை, முட்புதர், கருக்கு வாய்ச்சி. முசு - முசிறு - முசிடு = சுள்ளென்று கடிக்கும் செவ்வெறும்பு. முசுக்கட்டை = கம்பளிப்பூச்சி. முசுக்கை = முசுமுசுக்கை. மூசு மல்லிகை = ஊசி மல்லிகை. (குத்து) - குத்தி. (குந்து) - குந்தம், குந்தாலம், குந்தாலி, கூந்தாலம். (கொத்து) - கொத்து - கொட்டு. களைக்கொத்து, களைக்கொட்டு, கொட்டு, மண்வெட்டி முதலிய பெயர்களைக் காண்க. ஊசி என்னும் சொல் தமிழ்ச்சொல் என்பது, அதன் பொருட் காரணத்தால் மட்டுமன்றி, ஊசிக்கண் (சிறுகண்), ஊசிக்களா (முள்ளுக் களா), ஊசிக்காது (நுனித்துக் கேட்குஞ் செவி), ஊசிக்காய், ஊசிக்கார், ஊசிச் சம்பா, ஊசித் தூற்றல், ஊசிப்பாலை, ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசி மிளகாய், ஊசிமுல்லை, ஊசிவேர், குத்தூசி, துன்னூசி, தையலூசி முதலிய பெயர் வழக்குகளாலும் அறியப்படும். மேலும், வடமொழியிலுள்ள சூசி என்னுஞ்சொல் siv (to sew) என்னும் வேரினின்று பிறந்ததாகக் காட்டப்படுவது. ஊசி என்னும் தென்சொல்லோ குத்துவது என்று பொருள்படும் உள் என்னும் வேரினின்று உள் - உளி - உசி - ஊசி என ஒழுங்காகத் திரிந்திருப்பது. v. குறண்டும் பொருள்கள் குறண்டுதல் என்பது முட்கருவிகளால் வலிதாய் வழித்தல். குறண்டுதல் = வறண்டுதல். குறண்டி = ஒருவகை முட்செடி. குறண்டு - கறண்டு. குறண்டி - கறண்டி = குறண்டுங் கருவி. பாதாள கறண்டி (பாதாள வறண்டி) என்னுங் கருவியை நோக்குக. கறண்டு - கறட்டு (ஒ.கு.). |