பக்கம் எண் :

151

குறிப்பு: குருகு என்பது கொக்கை மட்டுங் குறியாது நாரை காரன்னம் முதலிய பற்பல நீர்ப்பறவை வகைகளைக் குறித்தலால், அவற்றைக் குறிக்கும்போது வளைந்த கழுத்துள்ளது என்று பொருள் கொள்ளப்படும். இதன் விளக்கத்தை வளைதலியலிற் காண்க.

xvii. தூய்மை

அழுக்கெல்லாம் பெரும்பாலும் பிற நிறமாயிருப்பதாலும், அழுக்கற்ற சாயந் தோய்க்காத ஆடை வெண்மையா யிருப்பதாலும், சுவரின் அழுக்கைப் போக்க வெண்சுண்ணம் பூசுவதாலும், வெண்மை தூய்மைக் கடையாளமாம்.

துள் - துய் - துய்ய = தூய. தூய் - து - துப்பு - துப்புரவு = தூய்மை.

துய் - தூய் - தூய்மை. தூய் - தூ.

புல் - பல் - பால் - வால். வான்மை = தூய்மை. வாலாமை = தூய்மையின்மை. வாலறிவு = தூய அறிவு.

முல் - முல்லை = கற்பு.

முள் - வெள் - வெள்ளை = தூய்மை, தூய ஆடை, வெண்பா. வெள் - வெளி = வெண்பா.

எக்காரணத்தையிட்டும் வேற்றுத்தளை விரவாது தன்றளை கொண்டே இயலும் தூய்மையுடைய பா வெண்பா (வெள் + பா).

வெள்ளை = களங்கமற்றவன், சூதுவாதில்லாதவன்.

“வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை”

என்றார் ஒளவையார்.

வெள் - வெள்ளந்தி = கள்ளங் கவடற்றவன்.

xviii. வெறுமை

தூய்மை யென்பது வேற்றுப் பொருளும் வேற்றுப் பொருளியல்புங் கலவாததாதலின், தூய்மைக் கருத்தில் தனிமைக் கருத்தும் தனிமைக் கருத்தில் வெறுமைக் கருத்தும் தோன்றும்.

தனிக்கருப்பைச் சுத்தக் கருப்பு என்று கூறுதல் காண்க.

வெண்மை = தூய்மை, தனிமை, வெறுமை.