பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

கவ - கவவு = கவ்வுதல், கவ்வினாற்போல் அணைத்தல், அகப் படுத்தல், அகத்திடுதல்.

“கவவகத் திடுதல்”                                   (தொல். உரி. 59)

கவவுக்கை = அணைத்த கை.

கவர்தல் = பற்றுதல், அகப்படுத்துதல், வசப்படுத்துதல். கவர் - கவர்ச்சி. கவ்வு - கப்பு = கவர்ச்சி.

கவர்தல் = பற்றுதல், பறித்தல். கவாஅன் = கவருங் கள்வன்.

கவர் - கவறு = கவருஞ் சூதாட்டு, சூதாடு கருவி.

கவ்வு - கவுசனை - கவிசனை = அகத்திடும் உறை.

கவ்வு - கப்பு. கப்புதல் = அகத்திடுதல், மூடுதல்.

கவ - கவை. கவைத்தல் = அகத்திடுதல், இரு கையாலும் அணைத்தல்.

கவ்வு - (கவள்) - கவளி = கவ்வினாற்போல் மேலும் கீழும் சட்டம் வைத்துக் கட்டும் பொத்தகக்கட்டு, கட்டு, வெற்றிலைக் கட்டு. கவளி - கவளிகை.

கவ்வு - கவுள் = கவ்வும் அலகு, கன்னம், உள்வாய், மேல்வாய் கீழ்வாயலகுகள் கவ்வுங் குறடு போலிருத்தலால், அலகு கொடிறு எனப்படுதல் காண்க. (கொடிறு = குறடு).

கவ - கவை = கவ்வும் அலகு போன்ற கவட்டை, கிளை. கவ - கவவு = கவட்டை. கவர்தல் = கவ்வும் அலகுபோற் பிரிதல். கவர் = பிரிவு. கவை, கிளை. கவராசம் = இரு கவருள்ள கருவி(divider). கவ்வு - கப்பு = கிளை.

(கவள்) - கவடு = கவை போன்ற தொடைச்சந்து, கவர், கவட்டை, கிளை. கவடு - கவட்டி = கவை, தொடைச்சந்து, கவடு - கவட்டை = கவை, பிரிவு, கிளை, சுண்டுவில்.

(கவள்) - கவண் = கவட்டை போன்ற கயிற்றுக்கருவி. கவண் - கவணை. கவண் - கவண்டு - கவண்டி.

கவணை கவண்டு கவண்டி என்னும் மூன்றும் கவண் என்பதன் மறுவடிவங்களே.

கவ - கவான் = தொடைச்சந்து, தொடை, தொடைச்சந்துபோல் இரு மலைக்குவடுகள் பொருந்தியிருக்கும் இடம்.