பறவைகள் போல் அடிக்கடி இடம் பெயர்ந்து வாழவேண்டியிருந்தது. முதன்முதற் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த அநாகரிக மாந்தர் பிற நிலங் கட்குச் சென்றமைக்கு இதுவே பெருங்காரணம். (3) செயற்கை விளைவு மாந்தர் செயற்கை விளைவைக் கண்டுபிடித்தபின் பலர் நில வளமும் நீர்வளமும் ஒருங்கேயுள்ள மருதநிலந் தேடிச் சென்று ஆங்காங்கு வாழநேர்ந்தது. (4) நிரைமேய்ப்பு ஆடு மாடு எருமை ஆகிய முந்நிரையின் பயனையே உண்டு வாழ்ந்தவர், அவற்றிற்கு வேண்டும் புன்னிலந் தேடிச் சென்று நாடோடியர் ஆயினர். (5) விலங்கச்சம் குறிஞ்சியிலும் அடவியான முல்லையிலும் வாழ்ந்த மாந்தர், என்றும் கொடிய விலங்குகளொடு போராட வேண்டியிருந்ததினால், அப் போராட்டத்தினின்று நீங்குதற்கு அவருட் சிலர் காட்டுச் சார்பை விட்டு நாட்டுச் சார்பை யுற்றனர். (6) கொள்ளையும் போரும் வறண்ட நிலமாந்தரும் உணவு விளைக்காத கூட்டத்தாரும், அண்டையிலிருந்த உழவரையும் இடையரையும் கொள்ளையடித்தும் கொன்றும் வந்ததனாலும், முந்தியல் மாந்தரின் போரிலெல்லாம் தோற்ற குலத்தார் அனைவரும் கொலையுண்பது மரபாதலாலும், கொள்ளைக் குலத்தையும் பகைக்குலத்தையும் அடுத்துவாழும் எளிய குலத்தார் தொலைவாகச் சென்றுவிடுவதுமுண்டு. (7) இயற்கைப் பேரூறு கடல்கோள், எரிமலைக் கொதிப்பு, நிலநடுக்கம் முதலிய இயற்கைப் பேரூறு நிகழ்ந்தவிடத்தாருள், இறவா தெஞ்சியவர் வேறிடஞ் சென்று விடுவது பெரும்பான்மை. (8) வணிகம் இருவகை வணிகமும்பற்றி நிலங்கடந்தும் நீர்கடந்தும் நெடுந்தொலைவு சென்று வாழ்பவர் பலர். |