பக்கம் எண் :

5

(9) கடற்புயலும் கலச்சேதமும்

கலஞ்செல் மக்களுள், கடற்புயலால் ஒதுக்கப்பட்டவரும், கலமுழுகித் தப்பியவரும், அடுத்த தீவிலும் நாட்டிலும் கரையேறித் தங்கி விடுவதுண்டு.

(10) துணிசெயல் (Adventure)

உறுவலியுங் கடுமறமுங் காரணமாக, துணிசெயல் நாடிச் சேணெடுந் தொலைவு சென்றுவாழும் இளைஞருமுளர்.

(11) பஞ்சம்

ஒரு நாட்டிற் பஞ்சம் நீடிப்பின், அந் நாட்டார் வளநாடு தேடிச் சென்றுவிடுவர்.

(12) தண்டனை

காட்டிற்குத் துரத்துவதும் நாடுகடத்துவதும், கடுங்குற்றவாளி கட்குப் பன்னாட்டரசியலாரும் தொன்றுதொட்டு இட்டு வருந் தண்டனையாகும்.

(13) அரசியற் கொடுமை

ஒரு நாட்டில் ஏதேனுமொரு காரணம்பற்றி அரசியலாரால் ஒடுக்கப்படுபவர், விடுதலை நாடிப் பிறநாடு செல்வர்.

(14) பிறநாட்டு விருப்பம்

ஓர் அயல்நாட்டின்மேல் ஒருவர் விருப்பங்கொண்டவிடத்து அங்குச் சென்று வாழ்வது இயல்பு.

மொழி தோன்றிய வகை

இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்திருந்த அநாகரிக மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அள வான கூட்டுறவு பூண்டு வாழ்ந்து வந்தனர். அவர் கூடி வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional Sounds), விளியொலிகள் (Vocative sounds), ஒப்பொலிகள் (Imitative Sounds), குறிப்பொலிகள் (Symbolic Sounds), வாய்ச்செய்கையொலி (Gesticulatory Sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery Sounds), சுட்டொலி (Deictic Sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையாகவும் ஆண்டு வந்தனர்.