“முனியுடைக் கவளம் போல” (நற். 360) முள் - முளை = இளமை. முளையன் = சிறுவன். முளையான் = சிறு குழந்தை. முள் - முட்டு - மொட்டு - மொட்டை. மொட்டைப் பயல் = சிறுபயல். முள் - முரு - முருகு = இளமை, இளைஞன், சேயோன். முருகு - முருகன். முறி - மறி = சிறியது. விலங்கின் குட்டி, சில விலங்கின் பெண். விலங்கினத்தில் பெண்பால் ஆண்பாலினுஞ் சிறிதாயிருப்பதால், மறி நாகு என்னும் இளமைப் பெயர்கள் சில விலங்கின் பெண் பாலையும் உணர்த்தும். முகு - மக - மகவு. மக - மகன், மகள். முது - (முதல்) - மதல் - மதலை = இளமை, குழவி. முள் - மள் - மள்ளன் = இளைஞன், வீரன். மள் - மழ = இளமை, குழவி. “மழவுங் குழவும் இளமைப் பொருள” (தொல். உரி. 14) மழ - மழவு = இளமை, குழவி. மழவு - மழவன் = இளைஞன், வீரன். மழ - மழலை = இளமை. மழ - மாழை = இளமை. முள் - விள் - விளவு = இளமை. விள் - விளர் = இளமை, முற்றாமை. விளர் - விளரி = இளமை. விள் - விழை - விழைச்சு = இளமை. விழை -விடை = இளம் பறவை. விடை - விடலை = இளைஞன், வீரன். (3) மடமை எவ்வகை யுயிரினத்திலும் இளமையில் அறியாமை மிக்கிருப் பது இயற்கையாதலால், இளமைக் கருத்தில் மடமைக் கருத்துத் தோன்றிற்று. மழ - மத - மட - மடம் = இளமை, மடமை. மட - மடப்பு - மடப்பம் = இளமை, மடமை. மட - மடை - மடைமை. |