வழை - வழைச்சு = புதுமை. “வழைச்சற விளைந்த” (பெரும்பாண். 280) (5) பசுமை புதுமையான முன்பருவத்தில், அதாவது இளம்பருவத்தில், பயிர் பச்சைகள் பசுமையாயிருப்பதால், புதுமைக் கருத்தில் பசுமைக் கருத்துத் தோன்றிற்று. பசுமை செழிப்பைக் குறிக்குமாதலால், புதுமைச் சொல் உடற் செழிப்பையும் உணர்த்தும். உடல் செழிம்பாயிருத்தலைப் புதுப்புது வென்றிருத்தல் என்பது மரபு. புது என்னும் சொல் இப் பொருளில் பெரும்பாலும் புசு என்று திரியும். புசுப்புசு வென்றிருத்தல் = மக்கள் உடல் செழிம் பாயிருத்தல். புது - புசு - புசுப்பு = உடற்செழிம்பு. புசு - பசு - பசுமை = புதுமை, இளமை, மென்மை, பச்சை நிறம், செழிம்பு. புதுமெழுக்கைப் “பசுமெழுக்கு” என்றார் கடியலூ?ர் உருத்திரங் கண்ணனார். (பட்டினப். 166) பசு - பச்சு - பச்சை = பசுமை, பசிய பொருள். பசுமை கண்ணுக் கினிய நிறமாதலால், கண்ணுக்கினிதா யிருத்தலைப் பச்சென்றிருத்தல் என்பர். பச்சுடம்பு = இளந்த உடம்பு. பச்சு - பச்சடி = வேவிக்காமற் பச்சையாகச் செய்யும் கூட்டு. சமைக்காத காய்கறிகள் பெரும்பாலும் பச்சைநிறமா யிருப்பதால், பசுமைச்சொல் சமையாமைப் பொருளைத் தந்தது. பச்சைவெட்டு பச்சூன் பச்சரிசி பச்சை வெண்ணெய் பச்சைத் தண்ணீர் முதலிய வழக்குகள் இக் கருத்துப்பற்றியன. பச்சை என்னுஞ் சொல், உணவின் திருந்தா நிலையைக் குறித்தல்போல், மொழியின் திருந்தா நிலையையும் குறிக்கும். இடக்கர்ப்பேச்சு பச்சைப்பேச்சு எனப்படும். பசு - பச. பசத்தல் = பச்சையாதல், பச - பசள் - பசண்டை = பசமை. பச - பசல் - பசலை = பசிய பொன்னிறத் தேமல். பசலை - பயலை = தேமல். |