iii. றகர வெதுகை குறு - குறுகுறு. குறு குறுத்தல் = வேண்டாததைச் செய்ய விரைதல். குறு - குறும்பு= சேட்டை. சுறு - சுறுசுறு - சுறுசுறுப்பு. சுறு - சுறுதி = வேகம். துறு - துறுதுறு. துறுதுறுத்தவன் = வேண்டாவினை அல்லது குறும்பு செய்துகொண்டேயிருப்பவன். (நூறு) - நொறு - நொறில் = விரைவு. (முறு) - முறுக்கு = வேகம், துடுக்கு. iv. டகர வெதுகை (உடு) - (ஒடு) - ஓடு. ஓடுதல் = விரைந்து செல்லுதல். குடு - குடுகுடு (வி. கு.). குடுகுடுவென்று ஓடுகிறான் என்னும் வழக்கைக் காண்க.குடுகுடுத்தான் = விரைவாளன் (அவசரக்காரன்.) குடு - கடு. கடுத்தல் = விரைதல், விரைந்தோடுதல். கடும்பா = விரைந்துபாடும் பா. கடுநடை = வேகநடை. “காலெனக் கடுக்குங் கவின்பெறு தேரும்” (மதுரைக்.388) கடு - கடுகு - கடுக்கம் = விரைவு. கடுகுதல் = விரைதல். கடு - கடி - கடிது. கடி = விரைவு. “எம்மம்பு கடி விடுதும்” (புறம்.9) சுடு - (சுட்டு) < சுட்டி = துடுக்கு, குறும்பு, சுட்டி - சுட்டிக்கை - சூட்டிக்கை = விரைவு. சுடு - சடு - சடுதி. சடு - சடுத்தம் = விரைவு. சடு - சட்டு. சட்டென்று செய், சட்டுச் சட்டென்று செய், என்று ஏவும்வழக்கைக் காண்க3. சட்டு- சட்ட - விரைவாக. துடு - துடுக்கு = வேகம், துணிவு, குறும்பு. துடு - துடும் (வி.கு.). துடு - திடு- திடும் (வி.கு.). திடு - திடீர் (வி.கு.). துடு - துடி - துடிப்பு + ஒன்றைச் செய்யவிரைதல். துடித்தல் = விரைந்து அடித்துக் கொள்ளுதல். 3. குதிரை வண்டி மாட்டு வண்டியைவிட வேகமாய்ச் செல்வதால், அது சடுக்கா(jutka) வெனப் பெயர் பெற்றதாகக் கூறுவர் |