உடு - இடு - இடை = ஒடுங்கிய மருங்குல். இடு - இடுப்பு. இடு - இடுக்கண் = ஒடுக்கி அல்லது நெருக்கி வருத்தும் துன்பம். இடு - இடர். இடர்ப்படுதல் = துன்பத்தால் அல்லது வறுமையால் நெருக்குண்ணுதல். இடு - இடங்கு - இடங்கர் - சிறு வழி. உள் - இள் - இண்டு = சிறிய இடுக்கு. இண்டும் இடுக்கும் என்பது வழக்கு. இள் - இட்டு - இட்டிது = ஒடுங்கினது, சிறியது. இட்டிடை = சிறிய இடைவெளி. இட்டேறி = ஏற்றமான சிறிய வண்டிப்பாதை. இட்டிகை = சிறு செங்கல். உடு - ஒடு - ஒடுங்கு - ஒடுக்கு - ஒடுக்கம். ஒடுங்கு - அடங்கு - அடக்கு - அடக்கம். அடங்குதல் = ஒடுங்கியமைதல். அடக்க வொடுக்கம் என்னும் வழக்கைக் காண்க. உற - உறங்கு - உறக்கு - உறக்கம். உறங்குதல் = ஒடுங்கித் தூங்குதல். ஊரடங்குதல் என்னும் வழக்கை நோக்குக. (குட்டு) - கிட்டு - கிட்டி = கெண்டைக்காலை நெருக்குங் கருவி. குள் - குட்கு - குக்கு. குக்குதல் = ஒடுங்குதல். குள் - குடு - கொடு - கொடுகு. கொடுகுதல் = ஒடுங்குதல். கொடு - (கோடு) - கோடங்கி - கோடாங்கி = உடுக்கு. சுள் - செள் - செறி. செறித்தல் = நெரித்தல், அடக்குதல். நுள் - நெள் - நெரு - நெருங்கு - நெருக்கு - நெருக்கம். முள் - முடு - முடுகு - முடுக்கு = சிறு சந்து. முடுக்கு - முடுக்கர். முள் - (மள்) - வள் = நெருக்கம். (6) தொடுதலியல் நெருங்கலுக்கு அடுத்து நிகழக்கூடிய தொடர்பு தொடுதல். முற் செல்லும் உயிரிகள் தாம் அடையக் கருதிய பொருள்களை அடுத்த பின் அவற்றைத் தொடும்; தற்செயலாக எதிர்ப்பட்ட பொருள்களையும் தொடலாம். இங்குத் தொடுதல் என்பது கையினால் தொடுவதைமட்டு மன்று, உடம்பாலும் குணத்தாலும் தொடுவதையும் குறிக்கும். |