பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

viii. விரிதல்

பிளந்த பொருள் விரியும்.

நொள் - நொகு - நொக்கு = வெடிப்பு.

கும் - கம் - கமர் = வெடிப்பு.

புள் - பிள் - விள்.

விள்ளுதல் = பிளத்தல், விரிதல்.

விள் - விள - விளவு. விளவுதல் = கமராதல்.

விள் - விரி - விரிவு. விரிதல் = பிளத்தல், வெடித்தல். பித்தச் சூட்டினாற் பாதத்தில் வெடிக்கும் வெடிப்பைப் பித்தவிரிவு என்று கூறுதல் காண்க.

விரி - விரல் = கையினின்று விரிந்தது.

விள் - விரு - விருவு = நிலச் சிறுவெடிப்பு.

விள் - விடு - விடர் = மலைவெடிப்பு, குகை.

விடுதல் = பிளத்தல், விரிதல். விடு - விடவு = விடர்.

விள் - (விய்) - வியம் - வியன் - வியல் = விரிவு, அகற்சி, பரப்பு.

வியல் - (வியலன்) - வியாழன் = கதிரவனைச் சுற்றும் கோள்களெல்லாவற்றிலும் பெரியது.

“வியல்என் கிளவி அகலப் பொருட்டே”                           (தொல்.உரி.66)

விள் - வெள் - வெடி - வெடிப்பு. வெடித்தல் = பிளத்தல்.

ix. வாய்விரிதல்

பிள் - பிளா - பிழா = வாயகன்ற ஓலைக்கொட்டான்.

பிழா - பிடா = வாயகன்ற நார்ப்பெட்டி.

பிடா - பிடகு - பிடகம் = தட்டு, பெட்டி.

பிள் - (பெள்) - பெட்டி = ஓலை நார் மரம் முதலியவற்றாற் செய்யப்பட்ட வாயகன்ற ஏனம்.

பெட்டி - பெட்டகம்.

(பெள்) - பேள் - பேழ் = பிளவு, விரிவு, அகற்சி. பேழ்வாய் = அகன்ற வாய்.

பேழ் - பேழை = வாயகன்ற செப்பு அல்லது மரக்கலம்.