xviii. பள்ளமுங் குழியும் தோண்டிய இடம் பள்ளமுங் குழியுமாகும். அவை இயற்கையும் செயற்கையும் என இருதிறப்படும். பள்ளத்தினும் ஆழ்ந்தது குழி. குள் - குழி - குழிவு. குள் - குண்டு. குண்டுங் குழியும் என்பது வழக்கு. குழி - குழிசி = குழிந்த பானை. குள் - குட்டு - குட்டம் = பள்ளம், ஆழம். குள் - (கள்) = (கய்) - கயம் = பள்ளம். குள் - கிள் - கீள் - கீழ் - பள்ளம். கீழ் - (கிழங்கு) - கிடங்கு. சுழித்தல் = கண் கு ழிதல். நுள் - நொள் - நொள்ளல் = கட்குழிவு. நொள் - நொள்ளை. நொள் - நெள் - ஞெள் - ஞெள்ளல் = பள்ளம். நொள் - நொடி = பள்ளம். புள் - பள் - பள்ளம். பள் - பள்ளன் = பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவன், உழவன். பள் - (பய்) - பயம் - பயம்பு = பள்ளம். பள் - பண் - பண்ணை = பள்ளம், குழி, நெற்குத்தும் பள்ளம், வயல். பள் - படு - படுகர் = பள்ளம், பள்ளமான வயல், மருதநிலம். புள் - பொள் - பொய் = குழி. முள் - மள் - மடு = பள்ளம். மள் - மள்ளன் = பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவன், உழவன். பள்ளன் என்பது உலக வழக்கும் மள்ளன் என்பது செய்யுள் வழக்குமாகும். “மள்ள ருழுபக டுரப்புவார்” (கம்பரா. நாட். 18) xix. நீர்நிலை பள்ளமான இடத்தில் நீர் தங்குவதனால், பள்ளத்தைக் குறிக்குஞ் சொற்கள் சில, நீர்நிலையைக் குறித்தன. நீர்நிலையைக் குறிக்குஞ் சொற்கள் சில, நீரையுங் குறிக்கும். |