பக்கம் எண் :

111

பேரின்ப வீடாகிய கோயிலையும், அடியார் பள்ளிகொள்ளும் மடத்தையும், வீடுகள் சேர்ந்த ஊரையும் குறித்த தென்றறிக.

பள் - படு. படுத்தல் = கீழாதல், விழுதல், கிடத்தல், தூங்குதல்.

படுதல் = விழுதல், போர்க்களத்தில் விழுந்திறத்தல், இறத்தல்.

படு - படுக்கை.

படு - படி. படிதல் = விழுதல்.

“நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச்
சென்றான் எனப்படுத லால்”                                            (28)

என்னும் நாலடிச் செய்யுளால், இருத்தல் என்பது கீழமர்தலைக் குறித்தல் பெறப்படும்.

xxv. இறங்குதல்

இறங்குதலாவது, மேற்றிசைப் பொருள் கீழ்த்திசை யடைதல். அவ் இறக்கம் உள்ளிடத்ததும் வெளியிடத்ததும் என இருதிறப்படும். முள் காலில் தைப்பது உள்ளிறக்கமும், பறவை விண்ணிலிருந்து மண்ணிற்கு வருவது வெளியிறக்கமும் ஆகும்.

உள் - இள் - இளி - இழி - இழிவு. இழிதல் = இறங்குதல்,

இள் - (இற) - இறங்கு - இறக்கு - இறக்கம்.

கும் - குமுங்கு. குமுங்குதல் = இறங்குதல்.

புள் - புழு - புகு. புகுதல் = இறங்குதல்.

இளி, இழி, இற, இறங்கு முதலிய சொற்கள் உகர முதலவாய் மூலவடிவிலிருப்பின் வேறு பொருள்படுமாதலின், அம் மயக்கத்தை நீக்குதற்கே இகர முதலவாயின வென்றறிக. சொல்லாக்க நெறிமுறைகளுள் முதன்மையானவற்றுள் இம் மயக்கொழிப்பும் ஒன்றாகும்.

xxvi. பழித்தல்

பழித்தலாவது, மதிப்பில் இறக்குதல். ஒருவரைப் பழித்தல், மேலிருந்து கீழும் மேட்டிலிருந்து பள்ளத்திற்கும் இறக்குதல் போன்ற தாம்.

உள் - (இள) - இழு - இகு - இகழ் - இகழ்ச்சி.

இள்  - இளி - இழி - இழிப்பு. இளி - இளிவு.