புள் - பள் - பள்ளை = கீழ்மட்டமான (குட்டையான) ஆடு. பள் - படு - படை = கீழ்மட்டம். படை - பாடை = கீழ்மட்டமான (தாழ்வான) கட்டில். படு - பாடு - பாடி = தாழ்வான கூரையுள்ள குடியிருப்பு அல்லது பாசறை. பள் - பண் - பாணி. பாணித்தல் = தாழ்த்தல். xxiii. தட்பம் குளிர்ச்சி சூட்டைத் தணிப்பதால் தணித்தற் கருத்தில் குளிர்ச்சிக் கருத்துப் பிறந்தது. வெப்பநாட்டில் சூடுதணிவு மிக முதன்மையாகக் கருதப்படும். துள் - தள் - தண் - தணம். தண் - தண்மை. தண் - தட்பு - தட்பம். தண் - தடு - தடுமம் = குளிர்ச்சி, நீர்க்கோவை. xxiv. கீழாதல் கீழாதலாவது அடித்திசை யடைதல். விழுதலும், படுத்தலும், நிலத்திற் கிடத்தலும், கீழாதலாம். உள் - (இள்) - இரு. இருத்தல் = கீழமர்தல், அமர்தல். (இள்) - இடு. இடுதல் = கீழிடுதல், கொடுத்தல். இடு - இடம், உல் - (இல்) - (ஈல்) - ஈன் - ஈனுதல் = கீழிடுதல், பெறுதல். “மணற்கீன்ற வெண்முத்தம்” ஈன் - ஈ. ஈதல் = இடுதல். குள் - (கிள்) - கிட - கிடக்கை. கிடத்தல் = நிலத்திலிருத்தல், படுத்திருத்தல். புள் - பள் - பள்ளி = படுக்கை, படுக்கையறை, படுக்கும் வீடு, வீடு, கோயில், இடம், வீடுகள் சேர்ந்த ஊர். பள்ளி கொள்ளுதல் = படுத்தல். பள்ளியெழுச்சி = படுக்கை விட் டெழுந்திருத்தல். மக்கள் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே வேலை செய்தலாலும், இரவிற் படுத்தற்கே வீட்டைத் தேடுதலாலும், படுக்கையைக் குறிக்கும் பள்ளியென்னும் சொல், வீட்டையும் |