குள் - (கள்) - (கய்) - கயம் - கயமை = கீழ்மை. கீழ் என்பது முதலாவது ஒன்றன் உட்பகுதியையே குறித்தது. நிலத்திற்குள்ளிருப்பது நிலத்தின் மேலுள்ள மக்கட்கு அடிப்புறத்தி லிருப்பதால், கீழ் என்னுஞ் சொல் பின்பு நிலத்திற்கு மேலுள்ள வெளியிடத்திலும் அடித் திசையைக் குறிப்பதாயிற்று. xxii. தாழ்தல் தாழ்வு என்பது கீழ்நிலை. உள் - (இள்) - (இழு) - இகு. இகுதல் = தாழ்தல். தாழ்ந்து விழுதல். இகுத்தல் = தாழ்த்தல். “மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணை” (மலைபடு. 226) “கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசை” (மலைபடு. 44) குள் - குண் - குணம் = தாழ்ந்த கீழ்த்திசை. குணம் - குணக்கு = கிழக்கு. குள் - கிள் - கீழ் = கிழக்கு. கீழ் - கீழ்க்கு - கிழக்கு. துள் - (தள் ) - தழு - தாழ் - தாழ்வு. தாழ் - தாழ்மை. தாழ் - தாழ்ப்பு = தாழ்த்தல், காலந்தாழ்த்தல். தாழ் - தாழம். தழு - தகு - தக்கு = தாழ்வு. தாழ்குரல் தொண்டையைத் தக்குத் தொண்டை என்று கூறுதல் காண்க. தக்கு - தக்கணம் = தாழ்ந்த தென்திசை. தெற்கிலிருந்த குமரிமலையும் நிலமும் முழுகி, வடக்கில் கடலிருந்த இடத்தில் பனிமலை யெழுந்ததால், தென்திசை தாழ்ந்து வடதிசை உயர்ந்தது. இதனால், தென்திசை தக்கணம் என்றும் வடதிசை உத்தரம் என்றும் கூறப்பட்டன. தக்கணம் தாழ்வு உத்தரம் உயர்வு. தமிழகப் பரப்பின்படி, நிலமட்டத்தில் தாழ்ந்ததும் உயர்ந்ததுமான கீழ்த்திசை மேற்றிசைகளும், முறையே, கீழ்மேல் அல்லது கிழக்கு மேற்கு என்றும், குணம் குடம் அல்லது குணக்கு குடக்கு என்றும் கூறப்படுதல் காண்க. தன் - தண் - தண. தணத்தல் = தாழ்த்தல், காலந்தாழ்த்தல். தள் - தண் - தணி - தணிவு. தணி - தணிச்சல். |