பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பழகு - பழங்கு. பழங்குதல் = ஒரு புதுப்பொருளைப் பலநாட் பயன்படுத்திப் பழைமை யாக்குதல், பயன்படுத்தல்.

பழங்கு - புழங்கு - புழக்கம் = ஒரு பொருளைப் பலகாற் பயன்படுத்தல், ஓரிடத்திற் பழகுதல், நடமாட்டம். பணப் புழக்கம் மக்கட் புழக்கம், என்பன வழக்கு.

xxxii. வழங்குதல்

வழங்குதலாவது நீளப் பழகுதல் அல்லது பயன்படுத்தல்.

பழ - வழ - வழமை = வழக்கம். வழ - வழப்பு - வழப்பம் = வழக்கம்.

(வழ - வாடு = வழக்கம்). தொழுவாடு = தொழில் வழக்கம் அல்லது குலவழக்கம், வழக்கம்.

வாடு - வாடுக்கை - வாடிக்கை = வழக்கம்.

வழ - வழங்கு - வழக்கு - வழக்கம்.

வழங்குதல் = பழகுதல், தொடர்தல், நடமாடுதல், பயன்படுத்தல், பயன்படுதல்.

வழக்கு - வழக்காறு.

xxxiii. வாழ்தல்

ஓரிடத்து நீடித்துப் பழகுதலே வாழ்தல்.

வழ - வாழ் - வாழ்க்கை. வாழ் - வாழ்ச்சி. வாழ் - வாழ்வு.

வாழ் - (வாழகை) - வாடகை = குடிக்கூலி, அதை யொத்த பிறகூலி.

அகை என்பது ஓர் ஈறு.

வாழ் - வாழ்த்து - வழுத்து. வழுத்துதல் = துதித்தல். கடவுள் வழுத்தைக் கடவுள் வாழ்த்து என்று கூறுதல் காண்க. வழுத்து - பழிச்சு.

(2) துளைத்தல் துறை

துளைத்தலாவது ஒரு பொருளைத் துருவுமாறு குடைதல்.

i. துளைத்தல்

உள் - உளு = துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். உளு - உசு.