விள் - (வீள்) - வீழ். வீழ்தல் = விரும்புதல். விளை - விழை. விழைதல் = விரும்புதல். விழைவு - விருப்பம், புணர்ச்சி. விழை - விழைச்சு = புணர்ச்சி. விள் - (விரு) - விரும்பு - விருப்பம். விழை - (விழாய்) - விடாய் = வேட்கை, நீர்வேட்கை. விள் - வெள் - வெய் - வெய்யன் = விருப்பமுள்ளோன். வெய்ம்மை - வெம்மை = விருப்பம். “வெம்மை வேண்டல்” (தொல். உரி. 36) வெள் - வேள் - வேட்கை = விருப்பம், காதல். வேள் = திருமணம். வேட்டல் = மணத்தல். வேள் - வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம். வெள் - வெள்கு - வெஃகு. வெஃகுதல் = விரும்புதல். வெள் - வெண்டு. வெண்டுதல் = ஆசைப்படுதல். வேள் - வேண்டு - வேண்டல். வேள் = விருப்பம். வேள் - வேளாண்மை = பிறரை விரும்பி யுணவளித்தல். வேள் - வேளாளன் = வேளாண்மை செய்யும் உழவன். வேளாண்மை = உழவுத்தொழில். வேளாண்மை - வெள்ளாண்மை - வெள்ளாமை. வேள் - வேண் - விருப்பம். வேண் + அவா = வேணவா. வேண்டு - வேண்டும், வேண்டா. வேள் - வேட்டம் = விருப்பம், உயிரிகளை விரும்பிப் பிடித்தல். வேள் - வேட்டை. வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு - வேடன். புள் - (பிள்) - (பிண்) - பிண - பிணா - பிணவு - பிணவல் = விரும்பப்படும் பெண், விலங்கின் பெண். பிண் - பிணை = விருப்பம். பிள் - பிடி = பெண் யானை. பிள் - பெள் - பெட்பு = விருப்பம். பெள் - பெட்டை - பெடை - பேடை. பெள் - பெண் - பெண்டு. பெண் - பேண். பேணுதல் = விரும்புதல், போற்றல். “பிணையும் பேணும் பெட்பின் பொருள” (தொல். உரி. 40) பேண் - பேடு - பேடன், பேடி. |