சுட்டினின்றும் வேறுபட்ட கருத்துச் சொற்களில், அது எங்ஙனம் விளங்கித் தோன்றும்? கருத்துத் திரியத்திரியச் சுட்டும் கரந்துகொண்டே செல்லும், ஆயினும், அங்காத்தலாற் பிறக்கும் அகரம் எங்ஙனம் வாய்திறப்பொலிகளிலெல்லாம் நுண்ணிதாய்க் கலந்து நிற்குமோ, அங்ஙனமே முன்மைச்சுட்டுக் கருத்தும் அதன் வழிப்பட்ட பிற கருத்துகளிலெல்லாம் நுண்ணிதாய்க் கலந்து நிற்கு மென்க. இனி, ஊகாரச்சுட்டினின்று உல் குல் சுல் முதலிய அடிகள் பிறந்த வகையைப்பற்றியும், சிலர்க்கு ஐயமெழலாம். முதலில் நெடிலாகவே யிருந்த மூவகைச் சுட்டுகளும், பின்பு அகச்சுட்டாகவும் புறச் சுட்டாகவும் சொல்லுறுப்பான போது, குறுகியும் வழங்கின. சுட்டு வழிப்பட்ட பல கருத்துகளையும் உணர்த்த வேண்டுமாயின், சுட்டடி யினின்று பல சொற்கள் திரியவேண்டும். அதற்கு, ஓரெழுத்துச் சொல்லான சுட்டுயிர்கள் மெய்யெழுத்துகளோடு சேர்தல் இன்றியமை யாதது; அச் சேர்க்கை முன்னும் பின்னும் நிகழலாம். முற்சேர்க்கை யினும் பிற்சேர்க்கையே சொற்பெருக்கத்திற் கேதுவானது. வல்லின மெய்யீற்றைப் பலுக்குதல் முந்தியல் தமிழர் நாவிற்கு எளிதாயிரா மையால், மெல்லினமெய்யீறும் இடையின மெய்யீறுமே தெரிந்து கொள்ளப் பெற்றன. மெல்லின மெய்களுள் வாய்மூடிய நிலையிலேயே மூக்குவழிக் காற்றாற் பிறப்பிக்கும் பகரமும், இடையின மெய்களுள் நாவை நுனியண்ணத்திலும் அண்பல்லிலும் பொருத்திப் பிறப்பிக்கும் லகரமும், குறைந்த முயற்சியுடையவா யிருத்தலின்; அவையே முதலாவது ஆளப்பெற்றன. அவ் விரண்டனுள்ளும் எளிய முயற்சியுடையது மகரமேயாயினும், சொல்வளர்ச்சிக் கேதுவாய்ப் பல வெழுத்துகளாகத் திரியக்கூடியது லகரமே யாதலின், அதுவே பெரும்பால் வேர்ச்சொல்லீறாகக் கொள்ளப் பெற்றது. எ-டு: உம் உம் - உம்பு, உந்து - உது - உசு, உது - உடு உம் - உவ் - உவு - உகு - உங்கு, உவு - உபு உம் - உன் - உல் உல் |