கலுழ்தல் = கலங்குதல், கண்கலங்கி அல்லது மனங்கலங்கி அழுதல். கலுழ் - கலிழ். கலுழ் - கலுழன் = வெள்ளையுஞ் சிவப்புமாகிய இரு நிறங் கலந்த பறவை. கலுழன் - கருடன் (வ.) குழம்பு - குழப்பு - குழப்பம். குழு - கழு - கழும் = மயக்கம். “கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்” (தொல். உரி. 53) குழு - கூழ் = கலக்கம். கூழ்த்தல் = ஐயுறுதல். “அவனிவ னென்று கூழேன்மின்” (திவ். திருவாய். 3:6:9) கூழ்படுதல் = கலக்கமுண்டாதல். “செல்படை யின்றிக் கூழ்பட வறுப்ப” (பெருங். மகத. 27:31) குழு - கெழு. கெழுவுதல் = பொருந்துதல், மயங்குதல். (சுள்) - செள் - செரு - செருக்கு - செருக்கம் - செருக்கல் = கள் மயக்கம். செருக்கு = மயக்கம், மதம், அகங்காரம். செருக்கம் = கள் மயக்கம். செருக்கு - தருக்கு. துதைதல் = செறிதல், கூடுதல். ததுமல் = கூட்டம், குழப்பம். முள் - முய - முயங்கு - மயங்கு - மயக்கம். முயங்குதல் = கூடுதல். மயங்குதல் = கூடுதல், கலத்தல். வேற்றுமை மயக்கம் = ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல். திணைமயக்கம் = ஒரு திணைப் பொருள் மற்றொரு திணை நிலத்திற் கலத்தல். முல் - மல் - மல. மலத்தல் = மயங்குதல். மல - மலங்கு - மலக்கு - மலக்கம் = மயக்கம். மலங்கு = பாம்புடம்பும் மீன்வாலுங் கலந்த நீருயிரி. மலங்கு - விலங்கு - விலாங்கு. மலங்கு - மதங்கு - மதக்கம் = மயக்கம். மதங்கு - மறங்கு. மறங்குதல் = மயங்குதல். |