மல - மலை - மலைவு. மலைத்தல் = மயங்குதல். மலம் - மதம் - மறம் = மயக்கம். மதம் - மதர். முள் - மள் - மரு - மருள் = மயக்கம். மருள் = மருட்கை = மயக்கம், வியப்பு, வியப்புச்செயல். மரு - மருமம் - மம்மம் - மம்மர் = மயக்கம். மம்மம் - மம்மல் = அந்திநேரம், மயக்கம், காமம், கல்லாமை. மரு - மறு - மறுகு - மறுக்கம் = மயக்கம். மறுகுதல் = கலத்தல், மயங்குதல். மறுகு = பல பண்டங்களும் மக்களும் கூடும் பெருந்தெரு. மறுகு - மறுகை. மல் - மால் = மயக்கம், காதல், பித்து. மால் - மாலம் = மயக்கும் வித்தை, பொய் நடிப்பு (மாய்மாலம்). மால் - மான் = மயக்கம். மான்றல் = மயங்குதல். மால் - மாலை = பல பூக்கள் கலந்த தொடை, பல மணிகள் கலந்த கோவை, இரவும் பகலுங் கலக்கும் அந்தி வேளை. மருண் மாலை என்னும் வழக்கை நோக்குக. மால் - மார் - மாரம் = மயக்கம், மாறாட்டம். மாரன் = காதல் மயக்கத்தை யுண்டுபண்ணுபவன். மள் - மாள் - மாழ் - மாழ்கு. மாழ்குதல் = மயங்குதல். மாழ் - மாழா. மாழாத்தல் = மயங்குதல். மாழ் = மாழை = மருட்சி, மயக்கம். முயங்கு - மயங்கு - மசங்கு. மயங்குபொழுது = அந்தி வேளை. மசங்கு - மசங்கல் = அந்திப் பொழுது. முய - மய - மச - மசகு = திகைப்பு, மயக்கம். மச - மசள் - மசண்டை = அந்திப்பொழுது. மச - மசக்கை = கருப்பிணிகள் அடையும் மயக்கம். மய - மயல் = மயக்கம், காதல். மயல் - மையல் = காதல் மயக்கம். மயல் - மயர் - மயர்வு = மயக்கம். முள் - (முறு) - விறு - வெறு - வெறி = மயக்கம். வெறுத்தல் = செறிதல், கூடுதல். |