ஒட்டுதல் = தைத்தல். குத்துதல் = தைத்தல். துன்னுதல் = தைத்தல். துன் - துன்னம் = தையல். துன்னகாரன் - தையற்காரன். துள் - (தள்) - (தய்) - தை. தைத்தல் - துணி பலகை முதலியவற்றை இசைத்தல். தை - (தைச்சு) - தச்சு - தச்சன். வண்டிக் குடத்தில் ஆரைகளைப் பொருத்தலைத் தைத்தல் என்பர். பொள் - பொட்டு - பொத்து. பொத்துதல் = மூட்டுதல். பொல்லம் பொத்துதல் என்னும் வழக்கைக் காண்க. முள் - மூள் - மூட்டு - மூட்டை - மூடை = மூட்டப்பட்ட கோணிப்பை. மூட்டுதல் = தைத்தல். (7) மூடல் துறை மூடலாவது, கொள்கலங்களின் வாயையும் போர்ப்பவற்றின் ஓரங்களையும் பொருத்தி மறைத்தல். i. மூடுதல் உம் - உமி. உமிதல் = வாய் மூடி எச்சில் உமிழ்தல். உமி - உமிழ். சுள் - (சூர்) - சார்த்து - சாத்து. சாத்துதல் = மூடுதல். தும் - துமி, துமிதல் = உமிதல். தூர்த்தல் = குழியையும் துளையையும் மூடுதல். பொது - பொத்து. பொத்துதல் = மூடுதல், மறைத்தல். பொது - பொதுக்கு. பொதுக்குதல் = மறைத்தல். முள் - மூழ். மூழ்த்தல் = மூடுதல். மூழ் - மூழல் = மூடி. மூழ் - மூடு - மூடி. மூடு - மூடம் - மோடம் = வானம் மூடிய மந்தாரம், மந்தாரம் போன்ற மடமை. மூடு = அறிவிலி. மூடம் - மூடன். மூழ் - மூய். மூய்தல் = மூடுதல், வாய்மூடி எச்சில் உமிழ்தல். மூய் - மொய். மொய்த்தல் = மூடுதல். |