பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

ஓடுதல் = ஒத்தல். ஓடு - ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு. குரங்காட்டம் ஓடுகிறான் என்று கூறுதல் காண்க.

குள் - கள் - கண் = கண. கணத்தல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். கணக்க = போல. குரங்கு கணக்கா = குரங்குபோல. கணக்கு = ஒப்பு. அந்தக் கணக்கில் = அந்த வகையில், அதைப்போல. கண - கணகு - கணக்கு.

குள் - கள் - கள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல்.

கள் - கடு - கடுத்தல் = பொருந்துதல், ஒத்தல்

குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல்.

குள் - குழு - கெழு. கெழுவுதல் = பொருந்துதல், ஒத்தல். கெழு - கேழ்= ஒப்பு.

சுள் - செள் - செய். செய்தல் = ஒத்தல்.

“வேனிரை செய்த கண்ணி”                                       (சீவக. 2490)

செய்யார் = பகைவர். செய் = செ. செத்தல் = ஒத்தல்.

செத்து = ஒத்து (தொல். பொருள். 286, உரை).

துல் - துல்லியம் = ஒப்பு, சரிமை. துல் - துலை = ஒப்பு.

துள் - தள் - தழு - தகு. தகுதல் = பொருந்துதல், ஒத்தல். தகுதி = பொருத்தம், பதவிக்குப் பொருத்தம்.

துணைதல் = ஒத்தல்.

நுள் - நள் - நளி. நளிதல் = பொருந்துதல், ஒத்தல். நளி - நடி.

புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல்.

புல் - புரை. புரைதல் = ஒத்தல்.

புல் - பொல் - போல். போலுதல் = ஒத்தல். போல் - போலி. போல = ஒப்ப.

பொல் - பொரு - பொருவு = ஒப்பு.

பொரு - பொருந் - பொருந்து.

பொரு - பொது = ஒப்பு, எல்லார்க்கும் ஒத்தது, நடுநிலை.

“ஒன்றோடு பொதுப்படா வுயர்புய த்தினான்”                 (கம்பரா. நாகபாச. 75)

பொது = ஒப்பு.