பொது - பொதுவன் - குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப் பட்ட முல்லைநிலத்தான். பொது - பொதியில் (பொது + இல்) = வழக்காளிக்கும் எதிர் வழக்காளிக்கும் பொதுவான அம்பலம். முன் - மன். மன்னுதல் = பொருந்துதல். மன் - மான். மானுதல் = ஒத்தல். v. துலை (தராசு) துலையின் சிறப்பியல்பு இருபுறமும் ஒத்தலாதலால், ஒத்தலைக் குறிக்குஞ் சொல்லினின்று துலைப்பெயர் தோன்றிற்று. “துலைநா வன்ன சமநிலை” என்று ஆத்திரேயன் பேராசிரியரும், “சமன்செய்து சீர்தூக்கும் கோல்” (குறள். 118) என்று திருவள்ளுவரும், கூறுதல் காண்க. ஒப்பு - ஒப்பராவு. ஒப்பராவுதல் = தராசு செய்தல். ஒப்பராவி = தராசு செய்வோன். துல்லுதல் = பொருந்துதல், ஒத்தல். துல் - துல்லியம் - துல்லிபம் = ஒப்பு. துலை = ஒப்பு. துல் - துலம் = நிறைகோல், துலா நிறை. துல் - துலா = நிறைகோல், நிறைகோல் போன்ற ஏற்றம், நிறை கோல் வடிவான ஓரை. கைத்துலா ஆளேறுந்துலா முதலிய ஏற்ற வகைகளை நோக்குக. துலாக்கோல் = கழுத்துக்கோல் என்னும் நிறைகோல். துலாக்கட்டை = துலாக்கோல் போன்ற வண்டி யச்சுக்கட்டை. துலா - துலாம் = நிறைகோல், துலாவோரை, ஏற்றம், ஒரு நிறை. துலாம் - துலான் = ஒரு நிறை. துல் - துலை = நிறைகோல், துலாவோரை, ஒரு நிறை, ஏற்றம். துலை - தொலை = ஒப்பு. |