vi. ஓவியம் ஒரு தோற்றத்தை ஒத்த வரைவே ஓவியம். உ - ஒ - ஓ = ஒப்பாகு (ஏ.). ஓ - ஓவம் = சித்திரம். ஓ - ஓவியம் = சித்திரம். ஓ - ஓடு = ஒப்பு, சித்திரம். ஓடு - ஓடாள்வி - ஓடாவி = சித்திரக் காரன். சுள் - செள் - செ. (செத்திரம்) - சித்திரம். ஒ.நோ: செந்துரம் - சிந்துரம். புல் - புள் - (பள்) - படு. படுதல் = உறுதல், பொருந்துதல், ஒத்தல். படு - படி = ஒப்பு, ஒத்தவகை, வகை. அப்படி, இப்படி, ஒருபடியாய் வருகிறது என்னும் வழக்குகளை நோக்குக. படி - படிமை = ஒப்பு, ஒத்த உருவம், வடிவம், கோலம், தவக்கோலம். படி - படிமம். படி - படிவு - படிவம். படிவு - வடிவு - வடிவம். vii. நடிப்பு ஒருவன் செயலை ஒப்ப இன்னொருவன் செய்தலே நடிப்பாம். நுள் - நள் - நளி - நடி. நள்ளுதல் = பொருந்துதல், செறிதல். நளிதல் = பொருந்துதல், செறிதல் = ஒத்தல். நளிய என்பது ஓர் உவமவுருபு. “நாட நளிய நடுங்க நந்த” (தொல். 1232) “நளியென் கிளவி செறிவும் ஆகும்” (தொல். உரி. 25) நளி - நளினம் = பகடி, கோமாளிக் கூத்து. நடித்தல் = பாசாங்கு செய்தல், கோலங்கொள்ளுதல், கூத்தாடுதல். நடி + அம் = நடம் = கூத்து. நடம் - நடன் = கூத்தன். “வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க” (பரிபா. 22:43) |