பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

அண்டு = மணிவட வுரு, சங்கிலி வளையம் (link).

அந்தச் சங்கிலிக்கு இன்னும் நாலு அண்டு வேண்டும் என்பது வழக்கு.

(4) பருத்தல். அண்டு - அண்டா = போகணி வடிவான பெருங்கலம். ஒ.நோ: குண்டு - குண்டா.

‘ஆ’ ஒரு தொழிற்பெயர் விகுதி.

எ-டு: உண் - உணா = உணவு.

அடி என்னுஞ் சொல், முதலாவது பருத்தது என்னும் பொருளில் மர அடியையே குறித்தது. எல்லாப் பொருள்களின் அடிப் பாகத்தையும் குறிக்க வழங்கியபின், அது தன் சிறப்புப் பொருளை இழந்தது.

குழு - கழு - கழி = கரும்புத்தண்டு. கருப்பங்கழி என்பது வழக்கு.

துள் - தள் - தாள் = நெல் புல் முதலிய பயிர்களின் அடி.

தள் - தண்டு = கீரை வாழை புல் முதலியவற்றின் அடி. தண்டுக் கீரை தண்டங்கீரை கீரைத்தண்டு முதலிய வழக்குகளைக் காண்க.

தள் - தட்டு = சோளம் கரும்பு முதலிய பயிர்களின் அடி.

தட்டு - தட்டை.

துள் - துறு - தூறு = தென்னை, பனை முதலியவற்றின் வேரொட்டிய அடி.

புள் - பூண்டு - பூடு = வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலியவற்றின் அடி.

முழு - (முது) - முதல் = புளி, வேம்பு முதலிய மரங்களின் அடி, அடி, காரணம். முழுமுதல் = திரண்ட அடி, கடவுள்.

முள் - மூள் - (மூண்டு) - மூடு = வாழை கற்றாழை தாழை முதலியவற்றின் வேரொட்டிய அடி.

மூட்டோடு மரத்தைச் சாய்த்துவிட்டான் என்பது வழக்கு.

முல் - (மூல்) - மூலம் = அடி, கிழங்கு, வேர், ஆதி, காரணம், வேர்போல் அடியில் முளைக்கும் நோய்.