பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

vii. செய்தல்

புதிதாகச் செய்யப்படும் பொருள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள பொருள்களின் அளவை மிகுத்தலால், மிகுத்தற் கருத்தில் செய்தற் கருத்துத் தோன்றிற்று. ஆங்கிலத்திலும் make என்னும் சொல்லை L. magnus (great) என்னும் சொல்லினின்று திரிப்பர். ஒரு தனிப்பட்டவர்க்கோ ஒரு கூட்டத்தார்க்கோ உள்ள பொருள் போதாத போது தேவையான அளவு அது பெருக்கப்படும். விளைவுப் பெருக்கம் என்று அடிக்கடி கூறப்படுதல் காண்க. பயிர் வளர்த்தலைப் பயிர்செய்தல் என்றும், பொருளீட்டுதலைப் பொருள் செய்தல் என்றும் கூறுவதை நோக்குக.

குள் - கள் - கடு - கரு.

கடுத்தல் = மிகுதல். கருவி = தொகுதி (group). கருமை = பெருமை.

ஆயுதத்தைக் குறிக்கும் கருவி என்னும் சொல் தூய தென் சொல்லாதலாலும், அதனோடு தொடர்புள்ள கரணம் என்னும் சொல் செய்கையென்று பொருள்படுதலாலும், இவ் விரண்டிற்கும் கரு என்பது பகுதியாயிருத்தலாலும், கரு என்னும் சொல் மிகுதிப் பொருள் தருதலாலும், மிகுத்தற் கருத்து செய்தற் கருத்தைப் பிறப்பித்தற்கேற்ற தாதலாலும், செய்தல் எனப் பொருள்படும் கருத்தல் என்பதொரு வினை முன்னொரு காலத்து வழங்கிப் பின்னர் வழக்கற்றுப் போனதாகத் தெரிகின்றது.

கரு - கருமம் = செய்கை, தொழில். ஒ.நோ: பரு - பருமம்.

கரு - (கரும்) - கருமம். ஒ.நோ: உரு - உரும் - உருமம்.

கரும் - கம் = தொழில், கம்மியர் தொழில்.

“ஈமுங் கம்மும்”                                         (தொல். எழுத்து. 328)

கம் - கம்மியம் - கம்மியன் = கம்மாளன்.

கம் - கம்மாளன்.

கருமம் - கம்மம் = கம்மியர் தொழில்.

“கம்மஞ்செய் மாக்கள்”                                     (நாலடி. 393)

கம்மவாரு = பயிர் வேலை செய்யும் தெலுங்க வகுப்பார்.

கரு - கருவி = செய்யும் ஆயுதம்.

கரு - கரணம் = செய்கை, சடங்கு, மணச்சடங்கு, உடன்படிக்கை, ஆவணம் (deed), ஆவணம் எழுதுவோன், கணக்கெழுதுவோன்.

கரணம் - கரணத்தான் = கணக்கன்.