கரணம் = செய்யுங் கருவி. அகக்கரணம் புறக்கரணம் என்பவை உடம்பிற்கு அகமும் புறமுமுள்ள கருவிகளாகிய உறுப்புகள். கரு - கார். கார் - காரணம். கார் - காரியம். கருநிறத்தையும் தோன்றுதலையுங் குறிக்கும் கரு என்னும் சொல்லும், கார் என்று திரிதல் காண்க. கார்த்தல் = கருப்பாதல், தோன்றுதல். அணம் இயம் என்பன விகுதிகள். ஒ.நோ: கட்டணம், ஏரணம்; கண்ணியம், வாரியம். கருமம் கருவி என்பன முதற்கால வடிவங்கள். அதனால், அவை மரபாகப் பண்டை நூல்களிற் பயின்று வருவன. கரணம் காரணம் காரியம் என்பன தொல்காப்பியர்க்கு முந்தின இடைக்கால வடிவங்கள். “கற்பெனப் படுவது கரணமொடு புணர” (தொல். 1088) “ஆக்கந் தானே காரண முதற்றே” (தொல். 504) “ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானை ” (நக்கீரர்) (சுள்) - செள் - செய். செய் - செழு - செழுத்தல் = மிகுதல். செழு செழுத்தல் = மிக வளப்பமாதல். செய் - செய்கை = செயல், பயிர்த்தொழில், உடன்படிக்கை, ஆவணம் (deed). “ஆதிசைவ னாரூரன் செய்கை” (பெரியபு. தடுத்தாட். 59) செய்கைக்காணி = பட்டயக்காணி. செய்தல் = திருத்தமாகச் செய்தல், வருந்திச் செய்தல். செய் = திருந்திய நிலம். நன்செய் = நன்றாகத் திருந்திய நிலம். புன்செய் = சிறிது திருந்திய நிலம். செய் - செய்யுள். “வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” (நன். 268) (புள்) - (பள்) - பண் - பண்ணை = தொகுதி, மிகுதி. பண்ணை - பணை = பெருமை. பணைத்தல் = பருத்தல், மிகுதல். “பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி. 251) பண் - பண்ணு. பண்ணுதல் = செய்தல், ஆயத்தஞ் செய்தல், அலங்கரித்தல், சரிப்படுத்துதல், இசைக்கருவியில் அலகு (சுருதி) அமைத்தல். |