xii. உறுதி உரம் - உரன். உறு - உறுதி - உறுதலை. குள் - கள் - கட்டு = உறுதி. கட்டு - கட்டி - கெட்டி. துல் - தில் - திர் - திரம் - திறம் - திறன். துள் - (திள்) - திண் - திண்ணம். திண் - திடம். திண் - திண்ணம் - திண்ணக்கம் = நெஞ்சழுத்தம். திண் - திடம் - திடாரி - திடாரிக்கம் = நெஞ்சுரம். (8) வளைதலியல் வேரும் ஆணியும் போன்ற நீண்ட பொருள்கள் தாம் முட்டின பொருளோ டொன்றாவிடத்துச் சாயும். இயங்குதிணை யுயிரிகள் சுவரும் மலையும் போன்றவற்றால் தடையுண்டவிடத்துப் பக்கமாகத் திரும்பிச்செல்லும். (1) வளைதல் துறை i. கோணுதல் கோணுதலாவது, நேராகச் செல்லும் பொருள் ஒரு பக்கமாகச் சாய்தல். உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் = சாய்தல். உறு - இறு - இற - இறப்பு = கூரைச்சாய்வு. இற - இறவாணம், இறவாரம் = கூரைச்சாய்வு. குள் - கொள் - கோள் - கோண். கோணுதல் = சாய்தல். கோண் - கோடு. கோடுதல் = சாய்தல். கோண் - கோணம் = சாய்வினால் உண்டாகும் மூலை. சுள் - சள் - சழி. சழிதல் - கலமும் பெட்டியும் பக்கமாக அமுங்கிச் சரிதல். சள் - சரு - சருவு. சருவுதல் = சாய்தல். |