சரு - சரி - சரிவு. சரிதல் = சாய்தல். சரி = அடிவாரம். சரு - சார். சார்தல் = சாய்தல். தூணில் சாய்ந்துகொண்டிருக்கிறான் என்பதும், தூணில் சார்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் ஒன்றே. சேர்தலைக் குறிக்கும் சார் என்னும் சொல்லும், சாய்தலைக் குறிக்கும் சார் என்னும் சொல்லும் வெவ்வேறு. சார் - சாரல் = மலைச்சரிவு, சாய்ந்து பெய்யும் மழை. சாரலன் = சாரல்நாடன், மலைநாடன். சாரலன் - சேரலன் - சேரல் - சேரன் = மலைநாடன், முத்தமிழ் வேந் தருள் ஒருவன். சள் - சாள் - சாடு. சாடுதல் = சாய்தல். சாடு - சாட்டம் - சாய்வு. சாடு - சாடை = நேரன்மை, சாயல், ஒப்பு. சாள் - சாய் - சாய்வு. சாய்வு சரிவு என்பது வழக்கு. சாயுங்காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம் = கதிரவன் சாயும் வேளை (எற்பாடு). சாய் - சாயை = நிழல். நிழல் சாய்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய் - சாயல் = நிழல், ஒருமருங்கு ஒப்பு. (தலை) சாய்த்தல் = தூங்குதல். சாய் - சயனம்(வ.). சாய் - சா - சாவு. சாதல் = சாய்ந்து விழுதல்போல் இறத்தல். துல் - தில் - திரு - திரும் - திரும்பு. திரும்புதல் - சாய்தல். உச்சிவேளைக்குப்பின் உடம்பு நிழல் சாய்வதை அடித் திரும்பு தல் என்று கூறுதல் காண்க. முல் - (மூல்) மூலை = கோணம். முள் - முட - முடங்கு - முடங்கி = மூலை. மூலை முடங்கி என்பது வழக்கு. முள் - (மூள்) - (மாள்) - மாண் - மாணல் = சாய்வு, வளைவு. கோணல் மாணல் என்பது வழக்கு. மாள் - மாடு - மாடை = சாய்வு. சாடைமாடை என்பது வழக்கு. நேராகப் பழிக்காமல் சாய்வு போன்ற நேரல் முறையில் பழித்தல், சாடைமாடையாய்த் திட்டுதல் எனப்படும். |