பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

மள் - வள் - வாள் - வார். வார்தல் = சாய்தல், சரிதல்.

வார் - வாரம் = சரிவான இடம். அடிவாரம் = மலைச் சரிவு.

தாழ்வாரம் = கூரைச்சரிவு.

வாள் - வாடு - வாட்டம் = சாய்வு. வாட்டம் சாட்டம் என்பது வழக்கு, அங்கணம் வாட்டம் சாட்டமாய் இருக்க வேண்டும் என்பர்.

ii. வளைதல்

வளைதலாவது, கொடியும் மெல்லிய கம்பியும் போன்ற நீண்ட துவள்பொருள்கள் வட்டமாகும் வரை மேன்மேலும் பலபடியாய்க் கோணுதல்.

உறு - இறு. இறுதல் = வளைதல்.

இறு - இற = வளைந்த பெருங்கூனி (prawn).

இற - இறா - இறவு. இறா - இறால் - இறாட்டு.

இற - இறை = பெண்டிரின் வளைந்த முன்கை.

குல் - குல் - குலவு. குலவுதல் = வளைதல். குலவு - குலாவு.

குல் - குன் - குனி. குனிதல் = வளைதல்.

குன் - கூன் = வளைந்த முதுகு. கூனுதல் = வளைதல்.

கூன் - கூனி = சிற்றிறால்.

குள் - குழி - குழியம் = வளைதடி.

குள் - (குண்) - குண - குணகு - குணக்கு = வளைவு. குணகுதல் = வளைதல்.

குள் - கூள் - கூளி = வளைந்த வாழைப்பழம்.

குள் - குரு - குருகு = (வளையல்), வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவையினம்.

குள் - குட - குடம் = வளைவு. குடா = வளைவு. குடந்தை = வளைவு. குட - குடக்கம் = வளைவு.

குரு - குர - குரங்கு = வளைவு, கொக்கி. குரங்குதல் = வளைதல்.

குர - குறள் - குறண்டு. குறண்டுதல் = வளைதல்.

குறள் - குறடு = வளைந்த அலகுள்ள கருவி.

குள் - கொள் = வளைந்த காணக்காய். கொட்பு = வளைவு.