புரு - புரி. புரிதல் = வளைதல். புரு - (புறு) - புறை - பிறை = வளைந்த நிலா. முல் - வில் = வளைந்த எய்கருவி. வில் - விலா = வளைந்த நெஞ்செலும்பு. முள் - முரு - முருகு = வளைந்த காதணி. முள் - முறு - முறி. முறிதல் = வளைதல். முறி - மறி. மறிதல் = வளைதல். முள் - முட - முடம் = வளைவு, கைகால் வளைவு. முடம் - (முடல்) - முடலை = பெருங்குறடு. முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல். முடங்கு - மடங்கு. மடங்குதல் = வளைதல். முடங்கு - முடக்கு - முடக்கம். மடங்கு - மடக்கு - மடக்கம். முடங்கல் = சுருண்டு முடங்கிய திருமுக வோலை. முள் - (மள்) - வள் - வளை - வளைவு. வள் - வள்ளி = கொடி. இனி, புள் - பள் - வள் எனினுமாம். வள் - வளார் = வளைந்த சிறு போத்து. வளார் - விளார் - மிலார் - மிலாறு. வள் - வாள் - வாளி = வளைந்த தூக்குப்பிடி. வள் - (வண்) - வணங்கு. வணங்குதல் = வளைதல். “சொல்வணக்கம் ஒன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.” (குறள். 827) வணங்கு - வாங்கு. வாங்குதல் = வளைதல், வளைத்தல். வாங்கு - வங்கு - வங்கி = வளைந்த கத்தி (பிச்சுவா), நெளிவு. வங்கி வளையல் = நெளிவளையல். வாங்கு - வாங்கா = வளைந்த ஊதுகருவி. வாங்கா - வங்கா. வண் - வணர் = யாழ்க்கோட்டின் வளைந்த கடை. வணர் - வணரி = வளைதடி. முள் - (முடு) - முடி - மடி. மடிதல் = வளைதல், மடங்குதல். |