பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

x. முடங்கிக் கிடத்தல்

முடங்கிக் கிடத்தலாவது சோம்புதலும் பயன்படாது ஓரிடத்துத் தங்குதலும்.

இயங்குதிணை யுயிரிகள் தூங்கும்போது பொதுவாய்க் கைகால் முடக்கிக்கொள்வதால், முடங்கற் கருத்தில் மடிமைக் கருத்துத் தோன்றிற்று.

இனி, மடக்குண்டு கிடத்தலே முடங்கிக் கிடத்தல் எனினுமாம்.

முடங்குதல் = தூங்குதல், வழங்காது ஓரிடத்தமர்தல்.

பணமுடக்கம் = பணம் வழங்காது ஓரிடத்துத் தங்குதல்.

முள் - முடு - முடி - மடி. மடிதல் = தூங்குதல், சோம்புதல்.

மடி = சோம்பல், கட்டுக்கடைச் சரக்கு.

மடிவீசுதல் = கட்டுக்கடைச் சரக்கு நாறுதல்.

xi. பன்முறை குறித்தல்

ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்தல். அதைப் பன்முறை செய்தலாதலால். திரும்பற் கருத்துச் சொல் பன்முறைக் கருத் துணர்த்தும்.

திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பவும், திரும்பியும்.

திரிய, திரியத் திரிய திரியவும்.

மடங்கி, மடங்கி மடங்கி.

மடக்கி, மடக்கி மடக்கி.

மடக்கு = ஒரு சொல்லைப் பொருள் வேறுபட மடக்கி மடக்கிக் கூறும் அணி.

மறிந்து.

மறித்து, மறித்தும்.

(முறு - மறு) மறுக்க, மறுத்து, மறுத்தும்.

மீள, மீண்டும், மீண்டும் மீண்டும்.

மீட்டும்.

வளைய, வளைய வளைய, வளைத்து, வளைத்து வளைத்து.