குறிப்பு: இங்குக் குறிக்கப்பட்டவற்றுள் மடக்கு என்னுஞ் சொல்லொன்றே பெயர்; பிறவெல்லாம் இடைச் சொல். xii. வேறாதல் ஒன்றைத் திரும்பச்செய்வது வேறொரு முறை செய்வதும், ஒன்றினின்று திரிதல் அதனின்று வேறுபடுதலுமாதலால், திரும்பற் கருத்துச்சொல் வேறாதற் கருத்தைத் தழுவிற்று. மறு = வேறு. மறு பிறவி = வேறு பிறப்பு. மறுபடி = வேறொரு முறை. மறுநாள் = அடுத்த நாள். மறு - மற்று = வேறு, திரும்பவும் வேறாக. மற்று - மற்ற - மற்றை (பெயரெச்சம்). மற்றொன்று = வேறொன்று. மற்றப்படி = வேறுவகையில். மற்றவன் = வேறொருவன், பிறன், அடுத்தவன். xiii. மாறுதல் வேறாதற் கருத்து மாறுதற் கருத்தைத் தழுவும். திரும்பு - திருப்பு. திருப்புதல் = மொழிபெயர்த்தல். சொல்லைத் திருப்புதல் = சொல்லை மாற்றுதல். திரும்பு - திறம்பு. திறம்புதல் = வேறுபடுதல், மீறுதல். திரிதல் = வேறுபடல், மாறுதல். திரித்தல் = வேறுபடுத்தல். திரி - திரிவு - திரிபு. திரிசொல் = இயற்சொல்லினின்று திரிந்த சொல். புள் - புரு - புரள். புரள்தல் = சொல் மாறுதல். புரள் - புரளி = மெய்ம்மாற்று, பொய். புரள் - புரட்டு - புரட்டன் . புரள் - பிறள் - பிறழ்ச்சி. புரள் - புரட்சி. முறு - மறு - மறுத்தல் = மாற்றுதல். மறு - மறுப்பு. மறு - மறை = மறைப்பு, எதிர்ப்பு - எதிர்மறை. மறுக்களித்தல் = பழைய கொள்கைக்கு மாறுதல். மறுதலித்தல் = பழைய கொள்கைக்கு மாறுதல். மறு - மாறு - மாற்று - மாற்றம். |