வண்ணத்தான் - வண்ணான் = ஆடைக்கு நிறமூட்டுபவன். வண்ணத்துப்பூச்சி - வண்ணாத்திப்பூச்சி. வண்ணம் - (வண்ணகன்) - வண்ணக்கன் = கட்டி நாணயத்தின் வண்ணத்தை (உரைத்து) நோட்டஞ் செய்பவன். வண்ணம் - வண்ணி. வண்ணித்தல் = வரணித்தல். வண்ணி - வண்ணகம் = வரணித்துப் புகழ்கை. ஒ.நோ: சுள் - சுண் - சுண்ணம் - சுண்ணகம். சுண்ணித்தல் = நீறாக்கல். வரி - வருவு. வருவுதல் = கோடிடுதல். வருவூசி = கோடிடும் ஊசி. வரி - வரை = கோடு, கீறல். வரைதல் = ஓவியம் வரைதல், எழுத்து எழுதுதல், கட்டுரை அல்லது நூல் எழுதுதல், காதலியின் தோளிலும் மார்பிலும் தொய்யில் வரைதல், அவளை மணத்தல். குறிப்பு: வண்ணம் வண்ணகம் என்பன தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழிலக்கணக் குறியீடுகளாதலானும், அவற்றாற் குறிக்கப்படுவன தனித்தமிழ் யாப்பு வகைகளாதலானும், அக் குறியீடு கட்கு மூலம் தனித்தமிழ்ச் சொற்களே. இனி, வண்ணம் என்னும் சொல், வகை என்னும் பொருளில், அவ்வண்ணம் இவ்வண்ணம் எவ்வண்ணம் என இருவகை வழக்கிலும் பெருவழக்காய் வழங்குதலையும் நோக்குக. நிறம் என்னும் வரணப் பெயரும் திறம் என்னும் வகைப் பெயரும் இசைவகையைக் குறித்தல் போன்றே, அவ் விரண்டையும் குறிக்கும் வண்ணம் என்னும் பெயரும் இசைவகையைக் குறித்த தென்க. தொல்காப்பியத்தில் 20 வண்ணங்களும், அவிநயத்தில் 100 வண்ணங்களும் கூறப்பட்டுள. “வண்ணந் தானே நாலைந் தென்ப” (செய். 210) என்று தொல்காப்பியம் வழிநூன்முறையிற் கூறுவது கவனிக்கத் தக்கது. xvii. வரம்பு ஓரிடத்தின் எல்லை கோட்டினால் குறிக்கப்படுவது வழக்க மாதலின், கோடிடுதல் எல்லை குறித்தலை யுணர்த்திற்று. |