உலகு - உலகம். உருள் - உருண்டை - உண்டை. குள் - குளிகை = உருண்ட மாத்திரை. குளி - குளியம் = உருண்டை, மருந்து (மாத்திரை). குளியம் - குழியம் = வாசனையுருண்டை. குள் - குண்டு = உருண்டை. குல் - கோல் - கோலி = உருண்டை, சிற்றுருண்டை. குள் - கொள் - கோள் - கோளம் = உருண்டை. கோள் - கோளா = உருண்டைக் கறி. சுள் - சுழி - சுழியம் = உருண்டைப் பலகாரம். புள் - (பொண்டு) - போண்டா = உருண்டைப் பலகாரம். முள் - முழி - விழி = கண்ணின் கருவிழி, விழி. மூக்கும் முழியும் என்பது உலக வழக்கு. முள் - (முடம்) - முடல் - முடலை = உருண்டை. வள் - வட்டு - வட்டணை = உருண்டை. (வடம்) - வடகம் = தாளிக்கும் உருண்டை. iii. உருண்ட திரட்சி உருண்ட திரட்சியாவது குண்டாயிருந்தும் முழுவுருண்டை யல்லாதது. உல் - உலம் = உருண்ட திரட்சி, உருண்ட கல். குள் - குண்டு = உருண்டு திரண்டது. குண்டுக்கல், குண்டுக் கோதுமை, குண்டுச் சம்பா, குண்டுமணி, குண்டுமல்லிகை, குண்டூசி முதலிய பெயர்கள் உருண்ட திரட்சிப் பொருள்களைக் குறிக்கும். குண்டு - குண்டா = உருண்டு திரண்ட கலம். குண்டு - கண்டு = நூற்பந்து. குண்டு - குட்டு = முட்டை(தெ.) குடம் - உருண்டு திரண்ட கட்டை அல்லது கலம். |