கிள் - கிளை. கிளைத்தல் = கிண்டுதல், கிண்டியதுபோற் பிரிதல். கிள் - கேள் - கேள்வி. கேட்டல் = கிண்டுதல்போல் வினவுதல், வினவியதற்கு ஒருவர் விடுக்கும் விடையைச் செவிமடுத்தல், செவிமடுத்தல். கிள் - கிண்டு - கெண்டு. கெண்டுதல் = கிளைத்தல், தோண்டுதல். கெண்டு - கெண்டி = நீருண்கலத்தின் கிளைபோன்ற உறிஞ்சி,அது உள்ள கலம். கிள் - கெள் - கேள் - கேழல் = நிலத்தைக் கிண்டும் பன்றி, அதையொத்த யானை. துல் = துன். துன்னுதல் = உழுதல், கிண்டுதல். துன்னூசி = கலப்பைக் குத்தி. துள் - துழ - துழவு. துழ - துழா - துழாவு. துழாவுதல் = கிண்டுதல். துள் - தொள் - தொய். தொய்தல் = உழுதல். நுள் - நள் - நண்டு. நண்டுதல் = கிண்டுதல். நண்டற்சோறு = தைப்பொங்கலிற் கிண்டிச் சமைத்த சோறு. நண்டல் = கிண்டிக் குழைந்த சோறு. நண்டல் கிண்டிப் படைக்கிறது என்பது உலக வழக்கு. நண்டல் பிண்டல் = கூழுங் கட்டியுமாய் ஆக்கிய சோறு. சோற்றை நண்டல் பிண்டலாக்கி விட்டான் என்பது வழக்கு. நண்டு = நிலத்தைக் கிண்டிச் செல்லும் நீருயிரி. நண்டு - ஞண்டு. நுள் - நெள் - நெண்டு. நெண்டுதல் = கிண்டுதல். நெண்டு = நண்டு. நெண்டு - ஞெண்டு = நண்டு. ஞெண்டுதல் = கிண்டுதல். முள் - முண்டு. முண்டுதல் = பன்றி முகத்தாற் கிளைத்தல். V. அறுத்தல் அறுத்தலாவது, வாளால் நீட்டுவாகில் பலமுறை துளைத்துக் கீறுதல் அல்லது துளைத்துத் துணித்தல். (உர்) - அர் - அரங்கு. அரங்குதல் = அம்பு முதலியன தைத்தல். (துளைத்து அறுத்தல்.) அரங்கு - அரக்கு. அரக்குதல் = கிளைதறித்தல், வெட்டுதல். |