பக்கம் எண் :

101

‘அறிவே ஆற்றல்’ (Knowledge is power) என்பர் ஆங்கிலரும்.

உளவலிமையொடு கூடிய உடல்வலிமை கூடத் தீமை விளைக்கும் என்பது, துறவியர் கருத்து. இதனாலேயே அவர் நோன்பாலும் தவத்தாலும் தம் உடலை ஒடுக்குவர். உளவலிமை யோடு கூடாத உடல் வலிமையோ, பிறர்க்குப் பெருந்தீங்கு விளைப்பது திண்ணம்.

உடல் பருத்தவனைக் குண்டன் என்றும், தடியன் என்றும் கூறுவது உலக வழக்கு. இப் பெயர்கள் தீயவன் அல்லது கொடியவன் என்னும் பொருளைப் பெற்றுள்ளன. தேவார ஆசிரியரும் திவ்வியப் பனுவல் ஆசிரியருங்கூடச் சமணரைக் குண்டர் என்று கூறுவர்.

உடல் தடித்தவன் குறும்பு அல்லது தீங்கு செய்வான் என்பது, மேற்கூறிய கூற்றால் விளங்கும்.

14. அறக்கடன்

ஒருவன் கடமையாகச் செய்யவேண்டிய பல வினைகளுள், அறமும் ஒன்றாகும். உயர்திணையைச் சார்ந்த காரணத்தினாலும், உலகம் கடவுளைத் தலைமையாகக் கொண்ட ஒரு மாபெருங் குடும்பம் என்னுங் கருத்தினாலும், ஒவ்வொருவனும் பிறர்க்கு, அவருள்ளும் சிறப்பாக ஏழை எளியவர்க்குத் தன்னால் இயன்றவரை உதவியும் நன்மையும் செய்தல் வேண்டும். இங்ஙனம் செய்தற்குக் கடப்பாடு என்று பெயர்.

“ கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
  டென்னாற்றுங் கொல்லோ வுலகு’’                                    (குறள். 211)

என்றார் திருவள்ளுவர்.

கடப்பாடு என்னும் சொல்லின் முதற்பொருள் கடன் என்பதே. ஒவ்வொருவரும் கருத்தினால், அச் சொல்லுக்கு ஒப்புரவொழுகல் (உபகாரஞ் செய்தல்) என்பது வழிப் பொருளாய்த் தோன்றிற்று.

15. படைஞன் இயல்பு

படைஞர் போரில் ஒருகால் தம் உயிரிழக்குமாறு பகைவரைக் கொல்லுந் தொழிலை அல்லது வெல்லுந்தொழிலை மேற்கொண் டிருப்பதனாலும், அவர்களின் நாட்டுத் தொண்டும் நிலையாமைச்