வள் - வளை = வளைந்த சங்கு, வளையல். வளை - வளையல், வளையம், வளைவி. வளை - வளைவு - வளவு. வளை - வளைசல் - வளசல். வளை +அகம் = வளாகம் = வளைந்த அல்லது சூழ்ந்த இடம். வள் - வண் - வணர் = யாழ்க்கோட்டின் வளைந்த பாகம். வணர் - வணரி = வளைதடி. வண் -வணம். வணங்கு - வணக்கம். வணங்குதல் = வளைதல், வழிபடுதல். வணங்கு - வாங்கு. வாங்குதல் = வளைதல். வாங்கு - வங்கு - வங்கி = வளைந்த வளையல், வளைந்த கத்தி (பிச்சுவா). வண் - வண்டு = வளையல், வட்டமான வண்டுவகை. வள் - வட்டு = வட்டமான ஓடு, வட்டமான அச்சுக் கருப்புக்கட்டி. வட்டு - வட்டம். வட்டு - வட்டி = வட்டமான பெட்டி. வட்டி - வட்டில் = வட்டமான கலம். வட்டி - வாட்டி = வளைப்பு, முறை, தடவை. வட்டு - வட்டை = சக்கரச்சூட்டு. வட்டை - வடை = வட்டமான பலகாரவகை. புல் - பல் - வல். வல் - வல. வலத்தல் = வளைதல், வளைத்தல். வல் - வலை = வளைந்த கயிற்றுக் கருவி. வள் - வாள் = வளைந்த கத்தி, கத்தி. வாள் - வாளி = வளையம், பிடிவளையமிட்ட கடைகால், பிறைமுக அம்பு. வாள் - வாடு - வட்டம் = வளைவு, முகம் வளையும் வருத்தம், பயிர்வளையும் வறட்சி, சரிவு. வாள் - (வாளம்) - வாணம் = வளையும் நெருப்பு வேடிக்கைக் கருவி, பிறைமுக அம்பு. 7. உல்-முல் முல் - முள் - (முளம்) - முடம் = வளைவு, காலின் வளைவு. முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல், மடிதல், தூங்குதல். |