பக்கம் எண் :

107

திகிரி = சக்கரம் (இலக்கணப்போலி). திர் - (திரு) - திரும் - திரும்பு. திரும்புதல் =வளைதல். திருமுதல் = வளைதல்.

திரும் - தெரும். தெரும் + வரல் = தெருமரல்.

“ அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’’                  (உரியியல், 13)

என்பது தொல்காப்பியம்.

திரு - திருகு. திருகுதல் = முறுக்குதல். திருகு - திருக்கு = முறுக்கு, வஞ்சனை.

4. உல் - நுல்

நுல் - நுள் - நுடம் = வளைவு, வளைந்த கால். நுல் - நுறு - நெறி. நெறித்தல் = வளைதல், வளைத்தல்.

5. உல் - புல்

புல் - புர் - புரள் - புரளி. புரள் - புரட்டு - புரட்டல். புரள் - பிறழ். புரண்டை - பிரண்டை - திருகியிருக்கும் கொடிவகை.

புர் - புரி. புரிதல் = வளைதல். புரி - புரிசை = வளைந்த மதில். புரி = மதில் சூழ்ந்தநகர், முறுக்குகுண்ட கயிறு அல்லது நூல். புர் - புரு - புருவம் = வளைந்த கண்பட்டை.

புரி - பரி - பரிசு - பரிசல் = வட்டமான மிதவைக் கூடை. பரி - பரிதி - பருதி = வட்டமான கதிரவன். பரி - வரி = வளைந்த கோடு, கோடு. வரிதல் = வளைத்துக் கட்டுதல்.

புல் - புள் - பள் - பண் - பண்டி - வண்டி = வளைந்த சக்கரம், சக்கரத்தையுடைய சகடம். கபிலையேற்றச் சக்கரத்தைக் கமலை வண்டி என்று உழவர் கூறுதல் காண்க.

பண்டி - பாண்டி - பாண்டில்.

பாண்டி = வட்டமான ஓடு, அதைக் கொண்டு விளையாடும் விளையாட்டு. பாண்டில் = வட்டமான கிண்ணம், அகல், தாமரை, உருண்டு திரண்ட எருது.

6. புள் - பள் - வள்

வள் - வள்ளம் = வட்டமான கலம், மரக்கால். வள் - வள்ளி = வளைந்த கொடி. வள் -வளார் - விளார் - மிலாறு = வளைந்த குச்சு அல்லது பிரம்பு. வள் - வளி = வளைந்தடிக்கும் காற்று.