பல பொருட்பெயர்கள், உவமையடிப்படையாக, அப் பொருள்களின் பண்பு குறித்துப் பெயரெச்சமாக வழங்கி வருகின்றன. எ-டு: சிறுமை - அரிசிப்பல், குருவித்தலை, கிளிவாதில், நரிக் கெளிறு, எரியாமணக்கு. நுண்சிறுமை - ஊசிமிளகாய், ஊசிவெடி. கூர்மை - ஊசிக்காது. பருமை - ஆனைநெருஞ்சில், கடாநாரத்தை. இடைமை (சிறுபருமை) - குதிரைவெடி. நெடுமை - ஒட்டகச் சிவிங்கி. நீண்மை - பாம்புக்கெண்டை, நாகப்பூச்சி. தாழ்வு - நாய்க்கடுகு, நாய்வேம்பு. இழிவு - கழுதைப் பொன்வண்டு, கழுதைக்கூத்து. தீமை - பேய்க்கரும்பு, பேய்வெள்ளரி. வன்மை - கல்விருசு, கல்வாழை. கருமை - காக்கைப்பிசின், காக்கைப்பொன். நீன்மை - மயில்துத்தம். மஞ்சண்மை - தங்கமேனி, பொன்வண்டு. இனி, சில முதற்சினைப் பெயர்கள், உவமையாகு பெயராக வும், ஈறு பெற்றும் பெறாதுவரும் ஒப்புமைப் பெயராகவும், வழங்கி வருகின்றன. எ-டு: உவமையாகு பெயர்: ஆட்டுக்கொம்பு (அவரை), காக்கைக்கால் (கொண்டி), கிளிமூக்கு (மாங்காய்), குருவித்தலை (மதிலுறுப்பு). ஒப்புமைப் பெயர்: (1). ஈறுபெற்றன - காடைக்கண்ணி, குதிரைவாலி. (2). ஈறுபெறாதன - ஆனைக்கால், மாட்டுப்பல். |