தமிழ்மக்கள் தனிப்பெரு நாகரிகத்தை யுடையவராயிருந்திருக் கின்றனர் என அறிக.4 திருந்திய மக்களை மற்ற உயிரிகளினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவேஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருள்களைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்து அவற்றிற் கேற்பப் பருப்பொருட் சொற்களும் நுண்பொருட்சொற்களும் அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும். தமிழின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் உணர்ந்த கால்டுவெல் ஐயர், “தமிழ்போன்ற திராவிட மொழியை நன்றாகக் கற்ற ஐரோப்பியர் ஒருவர், அத்தகைய வியத்தகுமொழியை வளர்த்துள்ள மக்களினத்தை மதிப்பொடு கருதாமல் இருக்க முடியாது’’, “தென்னிந்தியப் பழங்குடி மக்கள் மிக மதிநுட்பம் வாய்ந்தவர் என்பதற்கையமில்லை’’ எனக் கூறியுள்ளார். - திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் முகவுரை, பக். 9, 10. 4. ஆதிமக்கள் மருதநிலை யடைந்த பின்னரே நாகரிகத்தில் சிறந்ததையும், பேரூரும் நகரும் மாநகரும் முதன்முதல் மருதநிலத்திலேயே தோன்றியதையும், நகரம் என்னும் சொல்லின்றே நாகரிகம் என்னும் சொல் நிரிந்ததையும் ஊன்றி நோக்குக. |