பக்கம் எண் :

7

“ பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடிசேரா தார்’’                                         (குறள். 10)

என்றார் திருவள்ளுவர்.

பிறவிக் கடலினின்று ஆன்மாக்களைக் கரையேற்றுபவர் என்னும் கருத்தை யுட்கொண்டே, சமயகுரவரைத்தீர்த்தங்கரர் என்பர் சமணர். தீர்த்தம் என்பது நீர்நிலையைக் குறிக்கும் வடசொல்.

5. சில குணமும் செயலும்

பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து தழுவுந் தொழிலிற் சிறந்தவை. இதனால், முதலாவது ஒருவரையொருவர் உடலால் கட்டித் தழுவுவதையும், பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவு வதையும் அன்பாகப்பேணிக் காத்தலையும், குறிக்க அரவணைத்தல் என்னும் வழக்கெழுந்தது. அரவு, பாம்பு; அணைத்தல், தழுவுதல். “மாசுண மகிழ்ச்சி’’ என்றார் திருத்தக்கதேவரும். (சீவக. நா. 189)

நிறைகோலின் நாவு இருபுறமும் சமனாய் நிற்குமாறு நடு நிற்றல்போல, பகை நட்பு அயல் என்னும் முத்திறத்தும் ஒத்தநிலை நடுநிலை அல்லது நடுவுநிலை எனப்பட்டது.

தீயைப்போல் தீங்கு செய்யும் தன்மை தீமை என்றும், நீரைப் போல் நன்மை செய்யும் தன்மைநீர்மை என்றும், புல்லைப்போல் இழிந்த நிலை புன்மை என்றும் சொல்லப்படும். முதலாவது இனியதன்மையைக் குறிக்க எழுந்த நீர்மை என்னும் சொல், இன்று தன்மையென்னும் பொதுப்பொருளையே குறிக்கின்றது.

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’’                                 (கொ.வே.)

என்னும் ஒளவையார் கூற்றில் ஈயார் என்பது ஈயாதவர் என்றும், தேனீக்கள் அல்லது தேனீயைப் போன்றவர் என்றும்; தீயார் என்பது கொடியவர் என்றும், தீப்பந்தம் பிடித்தவர் என்றும், உவமை யணியோடு இரட்டுறலணியும் கொண்டிருத்தல் காண்க.

“ உடாஅதும் உண்ணாதுந் தம்முடம்பு செற்றும்
  கெடாஅத நல்லறமுஞ் செய்யார் _ கொடாஅது
  வைத்தீட்டி னாரிழப்பர், வான்தோய் மலைநாட
  உய்த்தீட்டுந் தேனீக் கரி’’                                              (நாலடி. 10)

என்பது நாலடியார்.