முறையே கோன் - கோ எனத் திரியும்; கோ பசு. கோக்களை மேய்ப்பது பற்றி ஆயனுக்குக் ‘கோன்’, ‘கோனார்’ என்னும் ஒருமைப் பெயரும் உயர்வுப் பன்மைப் பெயரும் வழங்குதல் காண்க. ஆயனைக்குறிக்கும் ‘கோன்’ என்னும் சொல்லும், அரசனைக் குறிக்கும் ‘கோன்’ என்னும் சொல்லும் ஒன்றே. அரசனுக்கும் குடிகட்கும் உள்ள தொடர்பு ஆயனுக்கும் ஆநிரைக்கும் உள்ள தொடர்பு போன்றது என்பதே, கோன் என்னும் சொல்லால் குறிக்கப் படும் கருத்தாம்.2 அரசன் கையிலுள்ள கோலும் ஆயன் கைக்கோல் போன்றதே. கோல் என்னும் சொல் ஆகுபெயர்ப் பொருளில் அரசாட்சியைக் குறிக்கும். நேர்மையான ஆட்சி செங்கோல் என்றும், கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்படும். இனி, சிவபெருமானும் உயிர்களையெல்லாம் காப்பதில் ஆயனை அல்லது அரசனை ஒப்பவராதலின், ‘கோவன்’ எனப்படுவர். உயிர்களை சிவபெருமானைப் ‘பசுபதி’ என்பதும் வடமொழி வழக்கு. 4. வாழ்க்கையியல்பு இவ் வுலக வாழ்க்கை ஓர் ஆற்றை அல்லது கடலைப் போன்றது. இவ்வுலக இன்பமாகிய சிற்றின்பத்திற் பற்றுவைத்து வாழ்வது, அந் நீர்நிலையில் மூழ்கியிறப்பதையும், பற்றற்று வாழ்வது அதை நீந்திக் கரையேறி யுய்வதையும் நிகர்க்கும். இதனால், உலகப் பற்றொழித்துப்பேரின்ப வீட்டையடைதற்குக் கரையேறுதல் என்றும், வீட்டுலக வாசிகளுக்கு அக்கரையர் என்றும் பெயர். “ நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றித் தொழூஉம்3 எழுகோடி மந்திரம் என்னகண்டாய்?4 ஆற்றைக் கடக்கத்5 துறைதெரி யாமல் அலைகின்றையே!’’ (பொது. 40) என்றார் பட்டினத்தாரும். இனி, இப் பிறவியை மட்டுமன்றி ஓர் உயிரின் பிறவி யனைத்தையும் கடலாக உருவகிப்பதே பெருவழக்காம். 2. கிறித்துவக் குருமாரை இக் கருத்துப் பற்றியே ஆங்கிலத்தில் shepherd என்றும், pastor என்றும் அழைப்பர். கிறித்துவ சபையார் ஆடுகளும் அச் சபைக் குருமார் மேய்ப்பரும் போல்வர். “நானே நல்ல மேய்ப்பன்” என்றார் ஏசுபெருமானும். பாட வேறுபாடு: 3. ஏற்றிக் கிடக்கும், 4. ஏதுக்கடா, 5. ஆற்றிற் கிடந்தும். |