வழக்கற்ற சொற்கள் தமிழைப்போலச் சொல்வளமுள்ள மொழி உலகத்தில் வேறொன்றுமில்லை. ஆயினும், ஆங்கிலக் கலை நூல்களை மொழி பெயர்க்கப் போதிய சொற்கள் இற்றைத் தமிழிலில்லை என ஒரு குறை அடிக்கடி கூறப்படுகின்றது. ஆங்கிலம் தற்கால மொழியாயும், நாள்தோறும் வளர்ச்சி யடைந்து வருவதாயும், உலகத்திலுள்ள மொழிகளினின்றெல்லாம் கடன் கொண்டுள்ளதாயும், மாநிலமெங்கும் பரவினதாயும், பிறநாட்டிலும் போற்றப்படுவதாயும், முழுமணி நூல்கள் மேன்மேலும் வெளியிடப் பெற்று வருவதாயும் பன்னாட்டரசியன் மொழியாயும், இருக்கும் பேறு வாய்ந்தது. தமிழோ, பழைமையான மொழியாயும், சென்ற மூவாயிரம் ஆண்டுகளாகத் தளர்ச்சியடைந்து வருவதாயும், வழங்கும் நிலம் வரவரக் குறுகி வருவதாயும், குறுகிய தன்னாட்டிலும் பெருகிய பகையுள்ளதாயும், தன் மக்களாலும் தள்ளப்படுவதாயும், இக்கால நூல்கள் எழுதப்படாததாயும், அரசியன் மொழியல்லாததாயும், எத்துணையோ கலைகளும் நூல்களும் சொற்களும் இறந்து பட்டும் வழக்கற்று முள்ளதாயும், இதுபோ துள்ளனவும் வழக்கற்று வருவதாயும் உள்ளது. ஆங்கிலம் எத்துணையோ சொல்வளம் மிக்கதாயினும், தமிழிலுள்ள பூட்டன் (Great GrandFather), சேயான் (Great Great Grand Father), ஓட்டன் (Great Great Great GrandFather), பகல், வெயில், காய், பிஞ்சு முதலிய பல பொருள்களை யுணர்த்தத் தனிச்சொல் கொண்டில்லை. அறிவியற் கலை நூல்களை மொழிபெயர்த்தற்கு வேண்டிய சொற்களும் குறியீடுகளும் தமிழி லில்லாமைக்குக் காரணம், கடந்த வோராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சி யடையாமையும் ஆயிரக்கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் இறந்து பட்டமையுமே. |